இயற்கை எழில் கொஞ்சும் நயினார்குளம் சுற்றுலா தலமாகுமா?


இயற்கை எழில் கொஞ்சும் நயினார்குளம் சுற்றுலா தலமாகுமா?
x

இயற்கை எழில் கொஞ்சும் நயினார்குளம் சுற்றுலா தலமாகுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருநெல்வேலி

தாமிரபரணி ஆறு மூலம் எத்தனையோஏரிகள், குளங்கள் தண்ணீரை பெற்று, வயல்வெளிகளில் பயிர் செழித்து வளருவதற்கு ஆதாரமாக திகழ்கிறது. அத்தகைய நீர்நிலைகளில் ஒன்று தான் நெல்லை மாநகரின் மையப்பகுதியில் 244 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் நயினார்குளம்.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த குளத்தின் கரையில் நின்று நெல்லையப்பர் கோவில் கோபுரங்களின் அழகை பார்த்து ரசிக்கும்போது, காற்றுக்கு ஆர்ப்பரித்து கரையில் மோதி சிதறும் தண்ணீர் நம் மீது விழுந்து சிலிர்க்க வைக்கும்.

கடல் போல் காட்சி

திருநெல்வேலி கால்வாய் மூலம் நயினார் குளத்துக்கு தண்ணீர் வருகிறது. நெல்லையப்பர் கோவிலின் வெளி தெப்பம் என்று அழைக்கப்படும் சந்திர தீர்த்தத்துக்கும் இங்கிருந்து தான் தண்ணீர் செல்கிறது. இந்த குளத்தின் கரையில் இலுப்பை, மருதம், பனைமரங்கள் ஓங்கி வளர்ந்து நிற்பது சிறப்பு.

தென்மேற்கு பருவ மழையின்போது பாபநாசம் அணையில் இருந்து ஜூன் மாதம் 1-ந்தேதி கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். அப்போது நயினார்குளம் முழுமையாக நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கும்.

வடகிழக்கு பருவமழையின்போது அக்டோபர் மாதத்தில் குளம் மீண்டும் நிரம்பி வழியும். இ்ங்கு மறுகால் பாய்ந்து அடுத்தடுத்த குளங்களுக்கு தண்ணீர் செல்லும்.

பார்வையாளர் மாடம்

இந்த நயினார் குளத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்த கடந்த 2011-ம் ஆண்டு ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்மூலம் குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டது. மேலும் குளத்தின் தெற்கு பகுதியில் படகு போக்குவரத்து, மிதக்கும் ஓட்டல் தொடங்குவதற்கு தேவையான கான்கிரீட் நடைபாதையும் (பார்வையாளர் மாடம்) உருவாக்கப்பட்டது.

அது திறப்பு விழா காணாமலே, காணாமல் போய் விட்டது. பார்வையாளர் மாடம் தற்போது சுவர் உடைந்து பரிதாபமாக காட்சி அளிக்கிறது.

ரூ.14 கோடியில் வசதிகள்

நெல்லை மாநகரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் நயினார்குளம் கரையில் ரூ.14 கோடி செலவில் நடைபாதை, சிறுவர்கள் விளையாட ஊஞ்சல் மற்றும் சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவை திறப்பு விழா காணாமல், பொதுமக்கள் பயன்பாடு இன்றி சுகாதாரமற்ற நிலையில் கிடக்கிறது.

பல இடங்கள் மதுப்பிரியர்களின் 'பார்' போல் மாறிவிட்டது. புதிய நடைபாதை வளாகத்தில் மதுபாட்டில்கள் அதிகளவு கிடப்பதை பார்க்க முடிகிறது. தற்போது அமலைச்செடிகளும் பரந்து வளர்ந்து புல்வெளி போல் தோற்றம் அளிக்கிறது.

படகு சவாரி

நெல்லை மாநகரில் அறிவியல் மையம், சினிமா தியேட்டர்கள் தவிர பெரிய அளவில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை என்றே கூறலாம். எனவே நயினார்குளத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்தி, படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் நயினார்குளத்தின் மேற்கு கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மக்களின் பொது போக்குவரத்துக்கு சாலை அமைக்க வேண்டும், படகு சவாரிக்கு ஒதுக்கப்படும் பகுதியின் நடுவே வண்ணமயமான செயற்கை நீரூற்று அமைக்க வேண்டும், புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேய்ந்தான்குளத்தை போன்று பறவைகளை கவரும் வகையில் நயினார் குளத்தின் நடுவே ஆங்காங்கே மண் திட்டுகள் உருவாக்கி மரக்கன்றுகள் நடவேண்டும் என்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு நீள்கிறது.

நயினார்குளத்தை அழகுப்படுத்துவது குறித்து பொதுமக்கள் மனம் திறந்து தெரிவித்த கருத்துகளை இங்கு பார்ப்போம்.

பாதுகாக்க வேண்டும்

முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் கொப்பரை சுப்பிரமணியன்:-

நயினார்குளம் கரையில் ரூ.14 கோடியில் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த நடைபாதையை நல்ல முறையில் பராமரித்து பாதுகாக்க வேண்டும். இதன்மூலம் நடைபாதையும், அங்குள்ள விளையாட்டு உபகரணங்களும் முறையாக பாதுகாக்கப்படும். நயினார்குளத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டால் மேலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உருவாகி வளர்ச்சி ஏற்படும். குளத்தில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகளை அகற்ற வேண்டும்.

நெல்லை டவுனை சேர்ந்த பாலகிருஷ்ணன்:-

ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்றால் படகு சவாரி முக்கிய இடம் பிடிக்கிறது. அதேபோல் சீசன் காலத்தில் மட்டுமே தண்ணீர் நிரம்பும் குற்றாலம் வெண்ணமடை குளத்திலும் படகு சவாரி நடக்கிறது. மணிமுத்தாறு அணையின் நடுவே ஆபத்து நிறைந்த படகு பயணமும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் நயினார்குளத்தில் படகு சவாரி என்பது மட்டும் நீண்ட நாள் கனவாகவே இருந்து வருகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் படகு சவாரி தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.Next Story