மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா?


மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா?
x

“என்னிடம் நீ தலைகுனிந்து படித்தால், உன்னை தலைநிமிரச் செய்வேன்'', இதுதான் நூலகம் நமக்குச் சொல்லும் அறிவுரை.

புதுக்கோட்டை

வாசிக்கும் பழக்கம்

புத்தகங்களை படிக்கும் பழக்கம் இருந்தால், சக மனிதர்களை நேசிக்கும் பழக்கம் தன்னாலே வரும். சிந்தனைகள் நிரம்பிய பெட்டகமாக இருக்கும் புத்தகங்கள் பலருக்கு, பலவிதமான சிந்தனைகளை தூண்டுகின்றன. அந்த சிந்தனைதான் ஒரு மனிதனை பல்வேறு இடங்களில் உயர்த்தி பிடிக்கின்றன.

அற்புதம் நிறைந்த புத்தகங்களை நூலகங்கள் போய் வாசிக்கும் பழக்கம் சமீபகாலமாக அருகி வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியே அதற்கு தூபமிடுகிறது. இருப்பினும் வாசிப்பை நேசிப்பவர்கள், இன்றும் நூலகத்தை நோக்கி நடைபோட்டு, புத்தகங்களை தேடிதேடிப் படிக்கத்தான் செய்கின்றனர். புத்தக கண்காட்சிகளில் பிடித்த புத்தகங்களை வாங்கி படிக்கவும் செய்கிறார்கள்.

நூலக வகுப்பு

குழந்தைப் பருவம் முதல் புத்தக வாசிப்புத் திறனை ஏற்படுத்த, பள்ளிக்கூட கல்வியில் இருந்தே ஊக்கப்படுத்தப்படுகிறது.

அதற்காக பள்ளிக்கூடங்களில் ஒரு வாரத்தில் 40 பாட வகுப்புகளில், புத்தகங்களைத் தேடிப் படிப்பதற்காக ஒரு பாடவகுப்பு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகுப்புகளில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அறிவியல், தனிமனிதர்கள், சிந்தனைகளை தூண்டும் புத்தகங்கள் உள்பட பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டு, அதை படிக்க வைத்து, அதன் வாயிலாக வினாக்கள் கேட்டு விடையளிப்பது, கலந்துரையாடுவது போன்றவை நடத்தப்படுகின்றன. இதுதவிர போட்டிகளும் நடத்தப்பட்டு, மாணவர்களை உத்வேகப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன. கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்திலும் இந்த நிகழ்வுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மாணவர்கள் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாணவர்கள் அவ்வாறு படிக்கிறார்களா? நூலகப் பாடவகுப்புகள் பள்ளிக்கூடங்களில் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது இருக்கிறது.

பல பள்ளிக்கூடங்களில் நூலகங்கள் கண்காட்சியாகவே இருக்கின்றன என்ற புகார்களும் வருகின்றன.

புத்தக வாசிப்பு அவசியம்

பள்ளிகளைப் போன்று, கல்லூரிகளில் இதற்கென்று தனிவகுப்புகள் இல்லாவிட்டாலும், கல்லூரி வகுப்பு நேரம் போக, மற்ற நேரத்தில் பொது நூலகங்கள் மற்றும் துறை சார்ந்த நூலகங்களில் மாணவமாணவிகள் நேரத்தை செலவிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் அதில் நேரத்தை செலவிடும் மாணவமாணவிகளின் எண்ணிக்கை என்பது சொற்ப அளவிலேயே இருக்கிறது. செல்போன் மோகம், அவர்களை அதில் மூழ்கடித்துவிட்டதால், நூலகங்களில் அறிவுசார்ந்த புத்தகங்களைத் தேடி படிக்கும் ஆர்வம் இல்லாமலே போய்விட்டது. இதனை மாற்ற வேண்டும். புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி, மாணவர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்.

அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினர் வழங்கியிருக்கும் யோசனைகள் வருமாறு:

நூலகத்திற்கு மாணவர்கள் வருகை அதிகம்

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி நூலகர் விக்டர்: எங்கள் கல்லூரியை பொறுத்தவரை மாணவர்கள் நூலகத்திற்கு வரும் பழக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் மாணவர்கள் நூலகத்திற்கு வருவது குறைந்திருந்தது. ஆனால் தற்போது அதிக அளவில் வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி கொள்வதற்காக நூலகத்தில் உள்ள புத்தகங்களை தேடி வருகின்றனர். தனியார் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நூலகர் என்று தனியாக உள்ளனர். ஆனால் அரசு பள்ளியில் அதுபோல் இல்லை. மேலும் கல்லூரிகளில் புத்தகம் வாங்குவதற்கு நிதி ஒதுக்குகின்றனர். ஆனால் மாணவர்கள் செலுத்தும் நூலக நிதியில் இருந்து தான் நாளிதழ் வாங்கப்படுகிறது.

அரசு பள்ளியில் இல்லை

ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி: தற்போது பள்ளிகளில் நூலகங்களின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. தனியார் பள்ளிகளில் வாரம் ஒரு முறை நூலக வகுப்பு என்று உள்ளது. ஆனால் அரசு பள்ளியில் அதுபோல் வகுப்பு இல்லை. இதற்கு காரணம் நூலகர் என்று இல்லை. மேலும் 10, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கணிதம், ஆங்கிலம், கம்ப்யூட்டர் போன்ற சிறப்பு வகுப்புகளுக்கு செல்வதால் நூலகத்திற்கு மாணவர்கள் செல்வதில்லை. எனவே அரசு பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு புத்தகங்களை கொடுத்து படிக்க வைத்து, படிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்.

புத்தகங்கள் வழங்க வேண்டும்

கறம்பக்குடி அம்புக்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி:

அனைத்து விதமான பள்ளிகளிலும் நூலகம் பயன்பாட்டில் உள்ளது. தனி பாடவேளை ஒதுக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இ.எம்.ஐ.எஸ். செயலியில் பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகம் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வாசித்த பின் புத்தகம் சார்ந்து ஓவியம், புத்தக மதிப்புரை, பேச்சு, ஆசிரியர் அறிமுகம், நூல் அறிமுகம், புத்தக ஒப்பீடு, கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று வருகின்றனர். ஆனாலும் இதுவரை நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்கள் மாணவர்களின் மன வயதிற்கு ஏற்றதாக இருப்பில் இல்லை. எனவே சிறார்கள் வாசிக்கக் கூடிய நூல்களை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.

மேலும் மாணவர்களின் ஒழுக்கம் அன்றாட பழக்க வழக்கங்கள் சார்ந்து அவர்களுக்கு கற்பிக்க வார இறுதியில் ஒரு பாடவேளை நீதி போதனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஊடகப் பயன்பாடு மிகுந்துள்ள இன்றைய காலகட்டத்தில் இந்த வகுப்புகள் மிக அவசிய அவசர தேவையாக உள்ளது. இந்த வகுப்புகள் கூடுதலாக வழங்கப்பட வேண்டிய தேவை உள்ளது. ஓதலில் சிறந்தன்று ஒழுக்கமுடைமை என்ற கருத்திற்கு இணங்க மாணவர்களை ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குள் முறைப்படுத்த இவ்வகுப்புகள் கட்டாயம் பயன்படும்.

அன்றாட பணியாக கருத வேண்டும்

குளவாய்ப்பட்டி பட்டதாரி ஆசிரியர் சண்முகநாதன்:

தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் நூலத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு மாணவன் நூலகம் சென்று பாட நூல்களோடு பிறநூல்கள், மாத இதழ்கள், நாளிதழ்கள் ஆகியவற்றை கற்று வந்தால் நிச்சயம் அவன் பல்துறை அறிவுடைய சிறந்த மாணவனாக விளங்குவார். வளர்ச்சி என்பது படிப்படியாக நிகழக்கூடிய ஒன்று. ஒரு பயிர் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தால் மட்டுமே அது நல்ல முறையில் வளர்ந்து பலன் கொடுக்கும். அதுபோல மாணவர்களின் வளர்ச்சியும் சீராக அமைந்து உரிய பலன் கிடைக்க நூல்களை படிப்பதை அன்றாட பணியாக கருத வேண்டும். நூலகங்களை பேணி பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

நூலகரை நியமிக்க வேண்டும்

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சஞ்சய்: அரசு பள்ளிகளில் நூல்நிலையங்கள் இருந்தபோதும் நூலகர்கள் இருப்பதில்லை. இதனால் நூலகத்தை பராமரிக்க முடியாத நிலை உள்ளது. எனவே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு தனியாக நூலகர் நியமிக்க வேண்டும். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் நூல் நிலையத்திற்கு கட்டிட வசதி, புத்தகங்களை பாதுகாப்பதற்காக தளவாட பொருட்கள் இல்லாத நிலை போன்ற குறைபாடுகள் உள்ளது. இதை சரிசெய்ய வேண்டும். மேலும் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை மாணவர்கள் செய்தித்தாள்களை வாசிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

நூலக பயன்பாடு குறைந்து வருகிறது

வடகாடு அரசு பள்ளி மாணவி லக்சயா:

நூலக பயன்பாடு என்பது ஒவ்வொரு பள்ளியிலும் இன்றியமையாத ஒன்றாகும். வகுப்பு ஆசிரியர்கள் அனுமதியோடு பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களை படித்து வந்தாலும், நூல்களை படிக்க அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அதிக நூல்களை படிப்பதின் மூலம் வரலாற்று சிறப்பு உள்பட அனைத்து விஷயங்களையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும். பொதுவாக பள்ளி பாடப்புத்தகங்களை மட்டுமே படிக்க அதிக நேரத்தை செலவிட்டு வருவதால் நூலக பயன்பாடு குறைந்து வருகிறது. எனவே நூலக பயன்பாட்டு நேரத்தையும் அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சவால்

பொதுநூலக இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான இளம்பகவத் கூறுகையில், ' புத்தக வாசிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை போட்டி மூலம் தேர்வு செய்து, அவர்களை தேசிய அளவில், சர்வதேச அளவில் சுற்றுப்பயணம் அழைத்து செல்கிறோம். அரசு புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த கொண்டு வந்திருக்கும் திட்டங்கள் மூலம் அரசு பள்ளி மாணவமாணவிகளின் புத்தக வாசிப்பு ஆர்வம் சற்று மேம்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது. வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், இந்த பணியை திறம்பட கொண்டு செல்வது ஒரு சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. டிஜிட்டல் மூலம் பார்ப்பது சுலபம். ஆனால் அதிலும் பாதகமான அம்சங்கள் இருக்கின்றன. அரசின் வாசிப்பு இயக்கம் தொடர் நிகழ்வாக இருக்கும்' என்றார்.

எளிய நடையில் கதைப் புத்தகங்கள்

பள்ளி குழந்தைகள் எளிமையாக படிக்கும் வகையில், கதைகள் அடங்கிய புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த புத்தகங்களில் நிறையப் படங்கள், எளிய வார்த்தைகள் இடம்பெற்று இருக்கும் என்றும், 3ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் அதை பார்த்து, படித்து, கருத்துள்ள கதையை புரிந்து கொள்ளும்படியாக புத்தகங்கள் தயாரிக்கப்பட உள்ளன என்றும் அவர்கள் கூறினர்.

குழந்தை எழுத்தாளர்கள், விருப்பமுள்ள ஆசிரியர்கள் இதில் அந்த கருத்துள்ள கதைகளை எழுதுவதற்கு ஏற்றவாறு ஏற்பாடு நடந்து வருகிறது. வாசிப்பு இயக்ககம் மூலம் இந்தப் புத்தகங்களை பிரபலப்படுத்தவும், அனைத்து பள்ளி நூலகங்களிலும் இந்த புத்தகங்களை இடம்பெறச் செய்யவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

டேட்டா கார்னர்

புதுக்கோட்டை மாவட்டத்தில்

மொத்த பள்ளிகள் 1,967

நூலகம் உள்ள பள்ளிகள்

உயர்நிலைப்பள்ளி 162, மேல்நிலைப்பள்ளி 188


Next Story