'ரெடிமேடு' ஆடைகள் வரவு அதிகரிப்பு:தையல் தொழில் நலிவடைகிறதா?தையல் கலைஞர்கள் கருத்து


ரெடிமேடு ஆடைகள் வரவு அதிகரிப்பு:தையல் தொழில் நலிவடைகிறதா?தையல் கலைஞர்கள் கருத்து
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

‘ரெடிமேடு’ ஆடைகள் வரவு அதிகரிப்பு காரணமாக தையல் தொழில் நலிவடைகிறதா? என்பது குறித்து தையல் கலைஞர்கள் கருத்து தெரிவித்தனர்.

தென்காசி

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் தையல் கடைகளில் துணிமணிகள் மலைபோல் குவிந்து கிடக்கும். தையல் கலைஞர்கள் இரவு, பகலாக துணிகளை தைப்பார்கள். காலப்போக்கில் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப 'ரெடிமெடு' என்று சொல்லப்படும் ஆயத்த ஆடைகள் அறிமுகமாகின.

குழந்தைகள் முதல் பெரியவர் வரையிலான அனைவருக்கும் இந்த ஆயத்த ஆடைகள் கிடைக்கின்றன. கடைகளுக்கு நேரடியாகச் சென்று, விருப்பமான உடையை, விரும்பிய கலரில் தேர்வு செய்து, கண்ணாடிமுன் நின்று அணிந்து அழகு பார்க்கும் வசதி இருக்கிறது.

இதனால் துணி எடுத்து தைத்து அணிய வேண்டும் என்ற பழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தையல் தொழில் நசிந்து வருகிறதோ? தையல் கலைஞர்கள் நலிந்து வருகிறார்களோ? என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

சித்திர வேலைப்பாடு

அதே நேரம் ரெடிமேடாகவே தைத்தாலும் அதையும் தொழிலாளர்கள்தானே தைக்கிறார்கள். பெண்களுக்கான பிளவுசுகள் ரெடிமேடாக வந்தாலும் இளம் பெண்கள் மாடலாக தைத்து அணிவதைத்தான் விரும்புகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் பெண்களுக்கு பிளவுசுகள் தைக்க பிரத்தியேகமாக நிறையக் கடைகள் முளைத்திருக்கின்றன.

திருமணம் மற்றும் விழாக்களின்போது பெண்கள் கட்டும் சேலைகளுக்கு மேட்சாக, பிளவுசுகளில் முத்துக்களை கோத்தாற்போல் பாசிகளில், பல வண்ண சித்திர வேலைப்பாடுகள் செய்து தருகிறார்கள்.

'ஆரி ஒர்க்' என்று இதைச் சொல்கிறார்கள். அவ்வாறு வேலைப்பாடுகளுடன் ஒரு பிளவுசு தைக்க ஆயிரம், இரண்டாயிரம் அல்ல; ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என கூலி ஆகுமாம்.

எனவே, தையல் தொழில் நசிந்து வருகிறதா? நாகரிகத்திற்கு ஏற்றவாறு வேறு போக்கில் வளர்ந்து இருக்கிறதா? தையல் கலைஞர்களின் நிலை என்ன? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

அரசின் ஆதரவுக்கரம்

தமிழ்நாடு தையல் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் திவ்யநாதன்:-

தமிழ்நாட்டில் 60 லட்சம் தையல் தொழிலாளிகள் இருந்தார்கள். 'ரெடிமேடு' ஆடைகள் பயன்பாடு அதிகரித்த பின்னர் தையல் தொழில் நலிவடையத் தொடங்கியது. எனவே, தையல் தொழிலாளர்கள் பலர் கட்டிட வேலை, பெயிண்டிங், ஆட்டோ ஓட்டுவது என்று தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டனர். இதனால் இந்தத் தொழில் அடுத்த தலைமுறைக்கு இருக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தையல் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை, பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. தையல் தொழிலாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தனி நலவாரியம் அமைத்துத் தரவேண்டும். ரெடிமேடு ஆடைகள் வடமாநிலங்களில் இருந்து தைத்து அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தைக் கொண்டு வந்து தமிழகத்தை சேர்ந்த தையல் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்.

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை தைக்கும் ஒப்பந்தத்தை அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்காமல் நேரடியாக தையல் கலைஞர்களிடம் வழங்க வேண்டும். எங்கள் சங்கம் சார்பில் தனியார் பள்ளிக்கூடங்கள், தனியார் நிறுவனங்களின் சீருடையைத் தைத்து தருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். தடுமாறி வரும் தையல் தொழில் கீழே விழாமல் இருக்க அரசாங்கம் ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டும்.

தையல் தொழிலாளர்

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த தையல் கலைஞர் முருகன்:-

தையல் தொழில் படிக்க தற்போது யாரும் முன்வருவதில்லை. முன்பு தங்களது குழந்தைகளை கைத்தொழிலாக தையல் கலையை படிக்க அனுப்புவார்கள். பெரிய தையல் கடைகளில் வேலைக்கு சேர்த்து விடுவார்கள். ஆனால் தற்போது இளைஞர்கள் செல்போனே கதியென்று கிடக்கிறார்கள். அவர்கள் இதுபோன்ற தொழிலை மேற்கொள்ள விரும்புவதில்லை. ஆண் டெய்லர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அடுத்த தலைமுறையில் ஆண் டெய்லர்களை பார்ப்பது கடினம்.

மவுசு குறைந்தது

மேலப்பாளையத்தில் டெய்லர் கடை நடத்தி வரும் சுசீலா:-

தையல் தொழில் நலிவடைந்து வருகிறது. ரெடிமேடு எனப்படும் ஆயத்த ஆடைகளால் மக்கள் உடனுக்குடன் ஜவுளி கடைகளுக்கு சென்று தேவையான ஆடைகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

பெண்களுக்கான ஆடைகளில் ஜாக்கெட் பிளவுஸ், சுடிதார் போன்றவை தைக்க தையல் கடைகளுக்கு வருகிறார்கள். இதில் ஜாக்கெட்டுகளில், 'ஆரி ஒர்க்', 'ஜர்தவுசி', 'எம்பிராய்டரி' போன்றவற்றுக்கு மவுசு இருந்தது. தற்போது வரும் சேலைகளில் இத்தகைய டிஷைன்கள் வைத்து ஜாக்கெட் பிட் உடன் சேர்ந்து வருகிறது. இது மவுசை குறைத்து விட்டது.

பெரும்பாலான பெண்கள் கைத்தொழிலாக தையல் கற்றுக் கொண்டு வீடுகளில் எந்திரங்கள் வாங்கி வைத்து, அவர்களுக்கு அவர்களே ஜாக்கெட் தைத்து கொள்கிறார்கள். இதுவும் தையல் தொழில் பாதிக்கப்படுவதற்கு காரணம் ஆகும். எனவே, தையல் தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலைகளுடன்....

நெல்லையை சேர்ந்த குடும்ப தலைவி சாந்தி:-

ஆண்களுக்கான ரெடிமேடு சட்டைகள் ரூ.200-க்கும், பெண்களுக்கான ரெடிமேடு சட்டைகள் ரூ.100 முதல் கிடைக்கிறது. தற்போது சேலைகளில் டிசைன்களுடன் கூடிய ஜாக்கெட் இணைத்து வருகிறது. இதனால் பொது மக்கள் ரெடிமேடு ஆடைகளை விரும்புகிறார்கள்.

தையல் கடைகளில் துணி தைக்க கொடுத்து சில நாட்கள் கழித்துதான் கிடைக்கும். ஆனால் ரெடிமேடு ஆடைகள் உடனடியாக வாங்கி, அளவு சரியாக இருக்கிறதா? என்று அணிந்து பார்த்து, புத்தாடைகளை அணிந்து கொள்ள முடிகிறது. அதனால் ரெடிமேடு ஆடைகள் விரும்பி வாங்குகிறோம்.

கடையை மூடி விட்டனர்

தென்காசியை சேர்ந்த தையல் கடை உரிமையாளர் பாலகிருஷ்ணன்:-

முந்தைய காலங்களில் பொதுமக்கள் பண்டிகை, பல்வேறு விழா காலங்களில் கடைகளில் துணி எடுத்து எங்களிடம் கொடுத்து தைத்து அணிவது தான் வழக்கமாக இருந்தது. ரெடிமேட் ஆடைகள் வந்த பிறகு பெரும்பாலான பொதுமக்கள் அவற்றையே வாங்கி விடுகின்றனர். இதனால் தையல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

பல தையல் தொழிலாளிகள் இந்த தொழிலையே விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்று விட்டனர். கடை நடத்தியவர்கள் பலர் கடையை மூடிவிட்டனர். எனவே, அரசு எங்களைப் போன்ற தையல் தொழிலாளர்களை பாதுகாக்க மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

என்னதான் ரெடிமெடு ஆடைகள் வந்தாலும், துணியை எடுத்து தையல் தொழிலாளியிடம் தைத்து உடுத்துவதை இன்னும் சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் ரெடிமெடு ஆடை விலையை காட்டிலும் தையல் தொழிலாளர்கள் கேட்கும் தையல் கூலி அதிகம் என்ற ஆதங்கமும் மக்களிடையே இருக்கிறது.


Next Story