அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை தரமாக இருக்கிறதா?


அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை தரமாக இருக்கிறதா?
x

அரசு டாக்டர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அரசு ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படும் சிகிச்சை தரமாக இருக்கிறதா? என்பது குறித்து நோயாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

அரசாங்கத்தின் அக்கறையும்..., டாக்டர்களின் அலட்சியமும்...,

நாட்டு மக்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் விதமாக மத்திய-மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. அந்த வகையில் தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு ரூ.17 ஆயிரத்து 61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஏழை-எளிய, பாமர மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவக்கல்லூரிகளுடன் இணைந்த ஆஸ்பத்திரிகள்-61, சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி-1, மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள்-18, வட்டம்/வட்டம் சாரா ஆஸ்பத்திரிகள்-272, ஆரம்ப சுகாதார நிலையங்கள்-1,804, துணை சுகாதார நிலையங்கள்-8 ஆயிரத்து 713, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்-463 ஆகிய எண்ணிக்கையில் ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன.

'நடமாடும் மருத்துவமனை திட்டம்', 'மக்களை தேடி மருத்துவ திட்டம்', 'இன்னுயிர் காப்போம் திட்டம்' போன்ற புதுமையான திட்டங்களும் மருத்துவத்துறையில் புகுத்தப்பட்டு வருகின்றன.

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு

மருத்துவத்துறையின் வளர்ச்சி, மேம்பாட்டை கருத்தில் கொண்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் ஒரு சில அரசு டாக்டர்கள் பணியில் அலட்சிய போக்கை கடைபிடித்து அப்பாவி மனித உயிர்களுடன் விளையாடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சென்னை பெரியார்நகர் ஆஸ்பத்திரிக்கு கால்தசை பிடிப்புக்கு சிகிச்சை பெற சென்ற வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (வயது 17) டாக்டர்கள் அளித்த தவறான சிகிச்சையால் தனது காலை இழந்து, பின்னர் உயிர் இழந்திருப்பது அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிரியாவின் மரணம் மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய களங்கத்தையும், அவப்பெயரையும் உண்டாக்கி உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நிகராக அரிய வகை அறுவை சிகிச்சைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெறுவது சாதனையாக பார்க்கப்படும் வேளையில் தவறான சிகிச்சைக்கு பிரியா பலியாகி இருப்பது மிகுந்த வேதனையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படும் சிகிச்சை தரமாக இருக்கிறதா? என்பது பற்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகள், பொதுமக்கள் கூறியதாவது:-

சக்திவேல் (திண்டுக்கல்) :- எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். அங்கு பரிசோதனை செய்ததில் இதயம், நுரையீரலில் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதற்கு எனக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். டாக்டர், செவிலியர் அடிக்கடி வந்து பரிசோதனை செய்தனர். இதனால் விரைவாக குணமடைந்தேன். தற்போது தொடர் பரிசோதனைக்கு சென்று வருகிறேன். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகளும் இருப்பதால், சிகிச்சையும் நன்றாக இருக்கிறது. நோயாளிகள் ஆஸ்பத்திரியை தூய்மையாக வைக்க ஒத்துழைக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வருவதால் பொறுமையும் அவசியம்.

விஜயா (மூங்கில்பட்டி):- நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக 4 நாட்களாக சிகிச்சை பெறுகிறேன். நன்றாக சிகிச்சை அளித்ததால் காய்ச்சல் சரியாகிவிட்டது. நத்தம் தாலுகாவை சேர்ந்த அனைவரும் இங்கு தான் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால் இங்கு ஸ்கேன் வசதி இல்லை. இதனால் ஸ்கேன் எடுப்பதற்கு மதுரை, திண்டுக்கல் செல்ல வேண்டியது இருக்கிறது. எனவே ஸ்கேன் வசதி செய்து தந்தால் நன்றாக இருக்கும்.

ஆறுமுகம் (பழனி) :-ஒரு காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் தரமான சிகிச்சை கிடைக்காது என்ற கருத்து இருந்தது. ஆனால் தற்போது பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை தரமாக இருக்கிறது. அதேநேரம் அரசு ஆஸ்பத்திரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மேலும் நன்றாக இருக்கும். அதேபோல் கூடுதல் டாக்டர், செவிலியர்களை நியமிக்க வேண்டும். மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும். அதற்கு நோயாளிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

மூக்கன் (ராக்கம்பட்டி) :-அரசு ஆஸ்பத்திரிகளில் நன்றாக சிகிச்சை அளிக்கின்றனர். அனைத்து விதமான நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிப்பதால், ஏழைகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். அதற்கு ஏற்ப டாக்டர், செவிலியர்களை நியமித்தால் நோயாளிகளுக்கு திருப்தியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story