பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா?-ஆசிரியர், பெற்றோர்கள் கருத்து


பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா என்பது குறித்து ஆசிரியர், பெற்றோர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

நாமக்கல்

கல்வித்துறையில் தமிழகம் பெற்றுவரும் வளர்ச்சிக்கு வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் முதல்-அமைச்சராக இருந்த போதுதான் மதிய உணவு, இலவச சீருடை, பள்ளி சீரமைப்பு இயக்கம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அனைவரும் சமம்

பள்ளிக்கூடம் என்று வந்துவிட்டால் ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், சாதி, மதம், இனம் வேறுபாடின்றி அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் சீருடை முறையை காமராஜர் கொண்டு வந்தார்.

குறிப்பாக தமிழக பள்ளிகளில் சீருடை 1964–-1965-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. அது அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள், உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. வாரம் ஒருநாள் (திங்கட்கிழமை) மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும்.

நீலநிற கால்சட்டை அல்லது பாவாடை, வெள்ளை நிற மேல்சட்டை அணிந்து வரவேண்டும்.

1964-–1965-க்கு முன்பு சில தனியார் பள்ளிகளில் சீருடை அணியும் பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே நிறத்தில் சீருடைகள் உள்ளன. அதேபோல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும், ஒவ்வொரு நிறத்தில் சீருடை முறை இருந்து வருகிறது. அதேபோல், தனியார் பள்ளி நிர்வாகங்கள் விரும்பும் நிறத்தில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சீருடை முறைகளை வைத்து உள்ளனர்.

இந்தநிலையில், பள்ளிகளில் சீருடை அணியும் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? சமத்துவப்பார்வையில் சீருடை அணியப்படுகிறதா? அல்லது நாகரிக நோக்கில் அணியப்படுகிறதா? என்பவை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

முடிதிருத்தம்

பொத்தனூர் வெங்கமேடு அரசு நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியை மாலதி:-

எங்கள் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 4 செட் சீருடை வழங்கப்படுகிறது. இதுதவிர அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகம், பாடக்குறிப்பேடு, புத்தகப்பை, வண்ண பென்சில்கள், கணித உபகரண பெட்டி ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

பள்ளியில் சீருடை முறையை அரசு கொண்டு வந்ததன் நோக்கமே மாணவர்கள் இடையே வேறுபாடு தோன்ற கூடாது என்பதற்காக தான். அதை மாணவர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். தையல் கலைஞர்கள் பள்ளிகள் கூறும் முறையில் சீருடையை சரியான அளவில் தைத்து கொடுக்க வேண்டும். முடிதிருத்தும் கலைஞர்களும் நாகரிகம், புதுமை என்ற பெயர்களில் மாணவர்களுக்கு முடிதிருத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

வரப்பிரசாதம்

நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் ஜெகதீசன்:-

எங்கள் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கும் அரசின் பள்ளிக்கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி பள்ளி சீருடைகள் வழங்கப்படுகிறது. ஓராண்டிற்கு 4 செட் சீருடைகள் என்ற வகையிலே அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

முதல் பருவத்தில் 2 செட் சீருடைகளும், இரண்டாம் பருவத்தில் ஒரு செட் சீருடையும், மூன்றாம் பருவத்தில் ஒரு செட் சீருடையும் என ஆண்டு தோறும் 4 செட் சீருடைகள் வழங்கப்படுகின்றன. நல்ல தரமான துணிகள் மூலம் தைத்தே மாணவர்களுக்கு வழங்கப்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் அணியக்கூடிய சீருடை எப்படி இருக்க வேண்டுமோ? அந்த அளவிலே பண்பட்ட முறையில் ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் தோற்றத்திலே வரவழைக்கும் வண்ணம் மிடுக்கோடு மாணவர்களுக்கு சீருடைகள் கிடைப்பது வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இது மட்டும் அல்லாமல் விடுதியிலே தங்கிப்பயிலும் மாணவர்களுக்கும் சீருடையானது விடுதிகளில் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் பொதுவெளியில் மாணவர்களை காண்பவர்களுக்கு அவர்கள் மீது ஈர்ப்பும், மரியாதையையும் ஏற்படுத்த கூடிய அளவுக்கு சீருடைகள் அமைந்துள்ளன.

படிப்பில் கவனம்

திருச்செங்கோட்டை சேர்ந்த இல்லத்தரசி நீலா:-

மாணவர்கள் சீருடையை சரியான அளவுகளில் தைத்து போடுகிறார்களா? இல்லை எனில் கால் பகுதியில் இறுக்கமாக வைத்து உள்ளார்களா? என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணித்து நடவடிக்கை எடுத்தால், ஆரம்பத்திலேயே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

சில தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்துடன் சீருடை மற்றும் அதை தைத்து கொடுப்பதற்கான கட்டணம் என அனைத்தையும் வசூலிக்கின்றன. இதுபோன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சீருடையை ஒழுக்க கேடாக அணிய வாய்ப்பு இல்லை. எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டும். சீருடையை மாற்றம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது.

இறுக்கமான சீருடை அணிவது இல்லை

நாமக்கல் அரசு பள்ளி மாணவர் அபுபக்கர்:-

பள்ளி நிர்வாகம் கூறிய நிறத்திலும், வடிவத்திலும், எனது உடல் அமைப்புக்கு ஏற்றவாறும் சீருடை தைத்து அணிந்து பள்ளிக்கு சென்று வருகிறேன். பள்ளி சீருடை மட்டும் அல்லாமல், வீட்டில் போடும் கால்சட்டையை கூட நான் கால் இறுக்கமாக தைத்து போடுவது இல்லை. இறுக்கமாக சீருடையை தைக்கவும், எனது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும், சீருடை மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது.

அரசு பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்களுக்கு தைத்தே சீருடை வழங்கப்படுவதால், இதுபோன்ற பிரச்சினை இல்லை. எங்கள் பள்ளியில் இறுக்கமான சீருடை அணிந்து வரும் மாணவர்களே இல்லை என்றே கூறலாம்.

மாற்றங்கள் செய்யக்கூடாது

எருமப்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி ரோஸ்லின்:-

சில மாணவர்கள் தையல் கடைக்காரர்களிடம் தாங்கள் விரும்பும் வகையில் கால் பகுதியில் இறுக்கமாக சீருடைகளை தைத்து கேட்கின்றனர். தையல்காரர்களும் அவ்வாறு தைத்து கொடுத்து விடுகின்றனர். இதுபோன்ற சீருடைகளை ஆசிரியர்கள் அனுமதிப்பதில்லை என்பதால் வரும் காலங்களில் தையல் கடைக்காரர்கள் பள்ளி நிர்வாகம் கூறியப்படி சீருடையை தைத்து வழங்க வேண்டும். மாணவர்கள் கேட்பதற்காக நாகரிகம் என்கிற பெயரில் சீருடைகளில் மாற்றங்கள் செய்யக்கூடாது.

மாணவர்களும் சீருடை மீது காண்பிக்கும் ஆர்வத்தை பாடம் படிப்பதில் செலுத்த வேண்டும். தையல் கடைக்காரர்களும் சீருடை விஷயத்தில் பெற்றோர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி திறந்த நாளிலேயே பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்பட்டு விட்டது. 12-ந் தேதிக்கு பிறகு சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் சீருடையை பொறுத்தவரையில் இதுவரை ஒதுக்கீடு வரவில்லை எனவும், இந்த மாதம் கடைசி அல்லது அடுத்தமாதம் (ஜூலை) முதல் இரு வாரங்களில் கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு முடிவு

தமிழக கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'அரசு உத்தரவுப்படி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டு பள்ளி தொடங்குவதற்கு முன்பாக அந்தந்த பள்ளிகளுக்கு கொண்டு வழங்கப்படுகிறது. இதனை பெற்றுக்கொண்ட பள்ளி நிர்வாகங்கள் அவர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடையாக வழங்குகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான சீருடை அமல்படுத்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக துறையிலும் பெரிய அளவில் எந்த திட்டமும் தற்போது இல்லை.

தமிழக அரசின் 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளி கல்வி துறைக்கு ரூ.40 ஆயிரத்து 290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பள்ளிக்கல்வி துறையில் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைப்பதற்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். நவீன விடுதிகள் கட்டவும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தான் சீருடை, கல்வி உபகரணங்களும் வாங்கி பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் சீருடை வேறு மாதிரி இருப்பதால் அரசு சார்பில் வழங்கப்படும் சீருடைக்கான துணி வேண்டாம் என்கின்றனர். ஆனால் அவர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் சீருடை வழங்க முடியாத ஒரு சில மாணவர்களுக்கு அரசு வழங்கும் சீருடைகளும் வழங்கப்படுகிறது' என்றனர்.

சீருடையை அறிமுகப்படுத்திய முதல் பள்ளி

1552-ம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள கிறைஸ்ட் ஹாஸ்பிடல் பள்ளி தான் பள்ளிச்சீருடையைப் பயன்படுத்திய முதல் பள்ளி என்று அறியப்படுகிறது. ஒரு நீண்ட நீல நிற மேல் அங்கி மற்றும் மஞ்சள் நிறத்தில், முழங்கால் வரையிலான காலுறை ஆகியன மாணவர்களுக்கு சீருடையாக வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட அதே மாதிரியான சீருடை இன்றும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களால் அணியப்படுகிறது.

சமூக ஆடைகளின் அடையாளங்கள் மாறியுள்ளதால் சமீபத்திய ஆண்டுகளில் சீருடைகளும் மாறிவருகின்றன என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


Next Story