தனியார் பயிற்சிக்கு இணையாக அரசு 'நீட்' தேர்வு பயிற்சி இருக்கிறதா?


தனியார் பயிற்சிக்கு இணையாக அரசு ‘நீட்' தேர்வு பயிற்சி இருக்கிறதா? என கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

நீட் தேர்வு என்பது பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துறைகளில் இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்காக, இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு முறையாகும்.

தேசியத் தேர்வு முகமை இதை நாடு முழுவதும் நடத்துகிறது. அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும் வகையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

720 மதிப்பெண்கள்

இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றில் இருந்தும் 45 வினாக்கள் கேட்கபடும். மொத்தம் 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படுகிறது.

இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, தெலுங்கு, பஞ்சாபி மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பான தகவல்களை வலைத்தளம் www.ntaneet.nic.in என்ற இணையத்தள முகவரியிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசுப் பள்ளிக்கூட மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி ஆண்டு தோறும் 400-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

தமிழக அரசு 412 பள்ளிகளில் நீட் தேர்வு மையங்களை நடத்தி வருகிறது. இந்த மையங்கள் தனியாருக்கு நிகராக இருக்கிறதா? மாணவர்கள் ஆர்வமாக சென்று படிக்கிறார்களா? என்பது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அத்துடன், அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி, கூடுதலாக நீட் தேர்வு மையங்களை தனியாருக்கு நிகராக அரசு தொடங்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாணவர்களுக்கு பயிற்சி

விருதுநகரை சேர்ந்த கல்வியாளர் டாக்டர் வெர்ஜின் இனிகோ:-

நீட் தேர்வு பயிற்சி என்பது பிளஸ்-1 வகுப்பிலேயே தொடங்கப்பட வேண்டும். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வினாக்கள் மாணவர்கள் புரிந்து எழுதக்கூடிய வகையில் தயாரிக்க வேண்டும். மனப்பாடம் செய்து குறிப்பிட்ட பாடப்பகுதியை படித்தால் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்கள் படிப்பது என்பது நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு உதவாது.

மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்களிலேயே மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் ஆசிரியர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரியர்கள் அந்த பயிற்சியை பெற்று மாணவர்களுக்கும் தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும். தற்போதைய நிலையில் ஒரு மாதம் மட்டும் பயிற்சி அளிப்பது என்பது நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு எந்த வகையிலும் உதவாது. எனவே தொடக்கத்தில் இருந்து மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளித்தால் அவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். தமிழகத்தில் ஒரு ஒன்றியத்திற்கு ஒரு நீட் தேர்வு பயிற்சி மையத்தை அரசு அமைக்க வேண்டும். இதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பயன்பெறுவர்.

வரப்பிரசாதம்

நீட் தேர்வு பயிற்சி மைய பொறுப்பாளரும், தலைமை ஆசிரியையுமான பழனியம்மாள்:-

மாவட்ட பள்ளிக்கல்வித்துறை குறைந்த காலத்திலும் அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் இடம்பெற வேண்டும் என்பதற்காக நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு மாணவ, மாணவிகளுக்கு அனைத்து உள்கட்டமைப்புவசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இங்கு பயிற்சிக்கு வந்துள்ள மாணவ-மாணவிகள் அனைவருமே மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

எனவே அவர்களுக்கு தங்குமிட வசதியுடன் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் உறுதியாக இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் மருத்துவ கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் செல்லும் நிலை ஏற்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த அரசு நீட் தேர்வு மையம் வரப்பிரசாதம் ஆகும்.

செய்முறை பயிற்சி

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் கோபி கிருஷ்ணன் கூறுகையில்,

நான் சேலம் மாவட்டம் கச்சனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவன். என் தந்தை விவசாயி. நான் கடந்த ஆண்டு அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து 307 மதிப்பெண்கள் பெற்று விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.

அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு கூடுதலாக செய்முறை பயிற்சி அளிக்க வேண்டும். கடைசி நேரத்தில் நெருக்கடி கொடுக்காமல் கால அவகாசம் கொடுத்து பயிற்சி தேர்வுகள் அதிகம் நடத்த வேண்டும். இதன் மூலம் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் பயில வாய்ப்பு ஏற்படும். தனியார் பயிற்சிக்கு இணையான அரசு நீட் தேர்வு பயிற்சி மையம் உள்ளது.

ஊக்கம் அளிக்கிறது

மாணவர் போஸ் பாண்டி:-

நான் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். மருத்துவக்கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அரசு நடத்தும் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து உள்ளேன். இங்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது அதிலும் கிராமத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த என்னை போன்றவர்களுக்கு புரியும் வகையில் எளிய முறையில் பயிற்றுவிக்கிறார்கள். இது எங்களுக்கு மனதிருப்தியையும் ஊக்கத்தையும் தருகிறது. உறுதியாக நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனது தந்தை கூலித் தொழிலாளி. அவரது நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் நான் பயிற்சி பெற்று உறுதியாக டாக்டர் ஆவேன். என்னை போன்ற மாணவர்கள் பயில நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

வெற்றி பெறுவோம்

மாணவி சிவகாமி:-

நான் விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவள். எனது தந்தை லட்சுமணன், கூலி தொழிலாளி. நான் தான் என் வீட்டில் மூத்தவள். நான் சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். எனது பெற்றோர் என்னை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர்.

அவர்களது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இந்த கல்வி ஆண்டு நிச்சயம் மருத்துவ கல்லூரியில் இடம் பெற வேண்டும் என்பதற்காக அரசு நடத்தும் நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகிறேன். அரசு எங்களுக்கு இந்த ஏற்பாட்டினை செய்து தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நீட் தேர்வில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் பயிற்சியின் போது மிகுந்த ஊக்கமும் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் நீட் தேர்வில் 400 முதல் 450 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கல்லூரியில் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

கூடுதல் மையம்

விருதுநகர் மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி திரிஷா:-

நான் நெல்லை மாவட்டம் வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்தவன். என் தந்தை மினி பஸ் கண்டக்டர் ஆக உள்ளார். எங்கள் கிராமத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த நான் நெல்லை அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று 292 மதிப்பெண்கள் பெற்று கடந்த ஆண்டு மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றுள்ளேன். அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்கள் தொடர்பாக பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம்.

மேலும் நீட் தேர்வு பயிற்சியை குறைந்த கால அவகாசம் மட்டுமே நடத்தாமல் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் போதே மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்கினால் இரண்டு ஆண்டுகளில் அவர்கள் நல்ல பயிற்சி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு ஏற்படும். எனவே அரசு மேற்கொண்டுள்ள இந்த பயிற்சி வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அதை இன்னும் செம்மைப்படுத்தி, கூடுதலான இடங்களில் பயிற்சி மையத்தை தொடங்க வேண்டும்.

எளிதான முறை

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி கீர்த்தனா:-

நான் விருதுநகர் சத்திரரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவள். எனது தந்தை டாக்டராக உள்ளார். நான் விருதுநகர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 படித்த போது ஒருங்கிணைந்த நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதனால் பிளஸ்-2 முடித்தவுடன் நீட் தேர்வு எதிர்கொள்ள தயார் நிலைக்கு வந்து விட்டேன்.

நான் நீட் தேர்வில் 453 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றேன். நீட் தேர்வுக்கான பயிற்சியை பிளஸ்-1 வகுப்பிலேயே தொடங்கப்பட வேண்டியது அவசியமாகும். அதுவே மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வை எதிர் கொள்ளும் போது எளிதான முறையில் இருக்கும்.

கூடுதல் வசதி

ராஜபாளையம் தோப்புப்பட்டி தெருவைச் சேர்ந்த மாணவன் ஞான செல்வராஜ்:- அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த கொரோனா காலத்தில் படிக்க முடியாமல் என்னை போன்ற மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். சிலர் வீட்டிலேயே இருந்து படித்து நன்கு தேர்ச்சி பெற்று உள்ளனர்.

அரசு பல சலுகைகள் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு அரசு நடத்தும் நீட் தேர்வு பயிற்சி மையம் எங்களை போன்ற மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. நாங்கள் நன்றாக படிப்பதற்கு ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் ஆகியோர் ஊக்கம் அளித்து வருகின்றனர்.

அரசு நடத்தும் நீட்தேர்வு பயிற்சி மையத்தில் இன்னும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி நிறைய இடங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பயிற்சி மையத்திற்கு இணையாக அரசு நீட் தேர்வு பயிற்சி மையமும் சிறப்பாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறும் போது, ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு பயிற்சி மையத்தினை அரசு நடத்தி வருகிறது. இந்த மையத்தை மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு அருகிலேயே நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது போல், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் தனி ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story