அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா?


அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா?
x
தினத்தந்தி 21 April 2023 12:30 AM IST (Updated: 21 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகூடங்களில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதுபற்றி பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அவற்றைக் காண்போம்.

திண்டுக்கல்

அரசுப் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள்தான் படிப்பார்கள். போதுமான வசதிகள் இருக்காது. அங்கு முறையாக ஆங்கிலம் கற்க முடியாது. ஆசிரியர்கள் ஏனோ தானோ என்றுதான் பாடம் நடத்துவார்கள். இவை எல்லாம் அரசுப் பள்ளிகளை நினைக்கையில் பல பெற்றோர்களின் மனங்களில் நிழலாடும் அச்சங்கள்.

இந்த அச்சங்கள் மாறவேண்டும். பெற்றோர்கள் மட்டுமே நினைத்து மாற்றிவிட முடியாது. அரசு நினைக்க வேண்டும். அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் நினைக்க வேண்டும். அர்ப்பணிப்பு மனதுடன் அறப்பணியாற்ற வேண்டும். அவ்வாறு நடக்கும் என்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே போகும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கல்வி நலத்திட்டம்

கல்விக்காக தமிழக அரசும் பல்வேறு நலத்திட்டங்களையும், காலை மதிய உணவுத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் வருகிற 28-ந்தேதி வரை 'அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அரசு பள்ளிகூடங்களில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதுபற்றி பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அவற்றைக் காண்போம்.

பல்வேறு சலுகைகள்

பார்வதி (பட்டதாரி ஆசிரியை, செட்டிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி) :- அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 100 வழங்கப்படுகிறது. அதேபோல் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.500-ம், 6-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1,000-மும் ஊக்குவிப்பு தொகையாக வழங்கப்படுகிறது.

மேலும் மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் 'ரெமிடியல் வகுப்பு' என்ற தினசரி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கல்வி தரமும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது.

விழிப்புணர்வு ஊர்வலம்

ஜெயக்குமார் (வியாபாரி, சீலப்பாடி) :- தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் தற்போது கல்வி தரத்தில் உயர்ந்து வருகிறது. அதோடு மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் தாய்மொழிக் கல்வி குறித்த விழிப்புணர்வு ஊர்வலமும் தற்போது அரசு பள்ளி ஆசிரியர்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கே அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு பள்ளிகளில் அவர்களை சேர்த்து படிக்க வைக்கவே பெற்றோர்கள் விரும்புகின்றனர்.

உமா மகேஸ்வரி (குடும்ப தலைவி, திண்டுக்கல்) :- அரசு பள்ளிகள் என்றாலே கல்வி தரம் இருக்காது என்ற எண்ணம் மக்களிடையே முன்பு இருந்தது. இதனால் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி படிக்க வைத்தனர். ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. தனியார் பள்ளிகளுக்கு இணையாக பல்வேறு வசதிகள் அரசு பள்ளிகளில் செய்யப்பட்டு கல்வி தரமும் உயர்ந்துள்ளது.

இதனால் ஏழை மாணவர்கள் மட்டுமின்றி வசதி படைத்தவர்களின் பிள்ளைகளும் தற்போது அரசு பள்ளிகளை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சில அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர இடம் கிடைப்பதே அரிதாக மாறி வருகிறது. மேலும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு பள்ளி நிர்வாகத்தினர் முறையாக செய்து கொடுத்தால் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

சிறப்பு வகுப்புகள்

விவேகானந்தன் (தலைமை ஆசிரியர், செந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி) :- மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதேபோல் சுமாராக படிக்கும் மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு புரியும் வகையில் எளிய முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்து பாடங்களை படிப்பதுடன் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சியும் பெறுகின்றனர்.

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு, ஆண்டு உயர்வது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் வினியோகம் செய்கிறோம். விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துகிறோம். இதனால் மாணவர் சேர்க்கை தற்போது கணிசமாக உயர்ந்து வருகிறது.

பெற்றோருக்கு உணர்த்த வேண்டும்

பால்ராஜ் (முதுநிலை தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி சிறுகுடி) :- அரசு பள்ளிகள் மூலம் தாய்மொழி கல்வி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்வதுடன், ஆங்கில வழியில் படித்தால் தான் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்கு தாய்மொழி கல்வியில் படித்தாலும் பல்வேறு துறைகளில் சாதிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிய வைக்க வேண்டும். ஆங்கில மொழி அவசியம் தான் ஆனால் தாய்மொழி கல்வி அதைவிட முக்கியம் என்று பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும். அப்படி செய்துவிட்டால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்'

தமிழ்நாடு கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் வருகிற 28-ந்தேதியாகும். அது வரை அரசுப்பள்ளிகளில் 2023-2024- கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், 'அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேரணிக்காக தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யோக வாகனத்தில் பள்ளிக் கல்விக்கான அரசின் திட்டங்கள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மன்ற செயல்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பேரணியில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்க உள்ளனர். அதன்படி 1 முதல் 9-ம் வகுப்புகளில் தங்கள் குழந்தைககளைக் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாகப் பதிவு செய்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன' என்றனர்.


Next Story