ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா?
இன்றைய நிலையில் ரெயில் பயணம் பாதுகாப்பானது என்று திண்டுக்கல்லை சேர்ந்த ரெயில் பயணிகள், தையல் தொழிலாளி, குடும்ப தலைவி ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் 2-ந்தேதி இரவு நடந்த சென்னை கோரமண்டல் ரெயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் வெறும் 'சிக்னல்' பிரச்சினையால் 3 ரெயில்கள் முட்டிமோதிக் கொண்டதில் 275 அப்பாவிப் பயணிகளின் உயிர்கள் பறிபோயிருப்பதை நினைக்கையிலே நெஞ்சம் பதறுகிறது.
வரும் காலங்களிலாவது இதுபோன்ற விபத்துகளை முற்றிலும் தடுக்க ரெயில்வே நிர்வாகம், தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்தி பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் அதன்மேல் உள்ள நம்பகத்தன்மை போய்விடும்.
இன்றைய நிலையில் ரெயில் பயணம் பாதுகாப்பானது என்று உணருகிறீர்களா? என்று திண்டுக்கல்லை சேர்ந்த ரெயில் பயணிகள், தையல் தொழிலாளி, குடும்ப தலைவி ஆகியோர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
கூடுதல் கவனம்
மோகன் (கல்லூரி மாணவர், மணப்பாறை):- நான் கடந்த 2 ஆண்டுகளாக ரெயிலில் தான் பயணம் செய்கிறேன். பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை பஸ் போக்குவரத்தைவிட ரெயில் போக்குவரத்தே சிறந்தது. மேலும் ரெயிலில் கழிப்பறை, படுக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பயணிகளுக்கு கிடைக்கிறது. டிக்கெட் கட்டணமும் குறைவாக உள்ளது.
ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், வாகன விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் அந்த விபத்தில் விலை மதிக்க முடியாத உயிர்கள் பலியாவதை தான் மனம் ஏற்க மறுக்கிறது. எனவே ரெயில்கள் செல்லும் பாதைகளில் இனிவரும் காலங்களிலாவது அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி விபத்து ஏற்படுவதை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.
பயணிகள் விவரம்
சங்கீதா (குடும்ப தலைவி, திண்டுக்கல்):- குடும்பத்தோடு பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கு ரெயில் பயணமே ஏற்றதாக இருக்கிறது. ஆனால் ஒடிசாவில் நடந்தது போல் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக விபத்து ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ரெயில் டிக்கெட் பெறுவதில் பல்வேறு வசதிகளை கொண்டு வந்த ரெயில்வே நிர்வாகம், ரெயில் பாதையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை அவ்வப்போது மேம்படுத்தி பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் ரெயில் விபத்தில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்தவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க முன்பதிவில்லா பெட்டிகளுக்கு டிக்கெட் வழங்கும் போது அதில் பயணம் செய்பவர்களின் விவரங்களையும் ரெயில்வே நிர்வாகம் சேகரிக்க வேண்டும்.
குறித்த நேரத்துக்குள்...
அனுசுயா தேவி (தையல் தொழிலாளி, ஆர்.எம்.காலனி):- கட்டணம் குறைவு என்பதால் இருக்கை கிடைக்கவில்லை என்றால் கூட ரெயிலில் பயணம் செய்வதையே நடுத்தர மற்றும் ஏழை மக்கள் விரும்புகின்றனர். ஏனெனில் குறித்த நேரத்துக்குள் பாதுகாப்பான முறையில் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு ரெயிலில் சென்றுவிட முடிகிறது.
விபத்து தவிர்க்க முடியாது என்றாலும் அவசர காலத்தில் ரெயில் பெட்டிகளில் இருந்து பாதுகாப்பாக பயணிகள் வெளியேறும் வசதியை ஏற்படுத்த வேண்டும். அதாவது ரெயிலின் என்ஜின் மோதிய வேகத்தில் சீட்டுக்கட்டு போல் ரெயில் பெட்டிகள் சிதறி விழுந்தாலும் அதில் பயணிப்பவர்கள் சுலபமாக பெட்டிகளில் இருந்து வெளியேறும் வகையில் பெட்டிகளின் கட்டமைப்பை மாற்ற வேண்டும்.
பாதுகாப்பு வசதி
ராமர் (முருக பக்தர், திருப்பூர்):- நான் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு திருப்பதி செல்ல உள்ளேன். ஆன்மிகம் மற்றும் சுற்றுலா பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரெயிலில் பயணிப்பதே பாதுகாப்பானது. பொதுவாக அடித்தட்டு மக்கள் வெளியூர், வெளிமாநிலம் செல்வதற்கு ரெயில் வழி பயணமே ஏற்றது. ஏனெனில் பொருளாதார அளவில் கட்டண செலவும் மிச்சம். இதில் கழிப்பிடம், படுக்கை என அனைத்து அம்சங்களும் உள்ளதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவருக்கும் ஏற்றது.
ஆனால் சமீபத்தில் ஒடிசா ரெயில் விபத்து நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை பற்றி நாளிதழ்களில் வாசித்ததும் மிகவும் வேதனை அடைந்தேன். எனினும் அதிகம் மக்கள் விரும்பி பயணிக்கும் ரெயில் பயணத்தில் போதிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
கூட்ட நெரிசல்
மணிகண்டன் (பெயிண்டர், சென்னை):- முருகப்பெருமானை தரிசிப்பதற்காக பழனிக்கு ரெயிலில் வந்தேன். தற்போது மீண்டும் ஊருக்கு ரெயிலில்தான் செல்ல உள்ளேன். பஸ்சில் வெகுநேரம் ஒரே இடத்தில் அமர்ந்தே பயணித்தால் பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ரெயிலில் பயணம் செய்வதே சிறந்ததாக உள்ளது. ஆனால் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் 2 அல்லது 3 தான் உள்ளன.
இதனால் அந்த பெட்டியில் கடும் கூட்ட நெரிசலுக்கு மத்தியில்தான் பயணம் செய்ய வேண்டி உள்ளது. அதேநேரத்தில் தனியாக ரெயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது. எனினும் ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ரெயில் பயணம் செய்ய சிறிது பயம் உள்ளது. ஆனாலும் குறைந்த கட்டணத்தில் செல்வதற்கு ஏற்றதாக ரெயில் பயணமே உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.