இஸ்லாமியத்தையும், திராவிடத்தையும் பிரிக்க முடியாது


இஸ்லாமியத்தையும், திராவிடத்தையும் பிரிக்க முடியாது
x

இஸ்லாமியத்தையும், திராவிடத்தையும் பிரிக்க முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் உள்ள வர்த்தக மையத்தில் ஆம்பூர் டேனர் சங்கம் சார்பில் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் தோல் தொழிற்சாலை அதிபர்கள் மெக்கா ரபீக் அஹ்மத், முகமத் சயீத், ஷபிக் அஹமத், கோட்டை முகமது மொஹீப்புல்லா, கலிலூர் ரஹ்மான், பயாஸ் அஹமத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணிதுறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசினார்.

அப்போது ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் 270 தோல் தொழிற்சாலைகளும், 110 காலணி தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகிறது. இந்த தோல் மற்றும் ஷூ கம்பெனிகள் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பெரியாரின் கனவை நிறைவேற்றிய இடம் ஆம்பூர். இங்குதான் ஆண்களை விட அதிகமான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். இஸ்லாமியத்தையும், திராவிடத்தையும் எப்பொழுதும் பிரிக்க முடியாது. ஆம்பூர் பகுதியில் வருடத்திற்கு சுமார் ரூ.5,000 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. இதில் வருடத்திற்கு சுமார் ரூ.2500 கோடிக்கு ஏற்றுமதி நடக்கிறது. இது இந்திய அளவில் 18 சதவீதம் ஆகும் என்றார்.

தொடர்ந்து ரெட்டித்தோப்பு பகுதியில் புதிதாக பாலம் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்தார். வேலூ‌ர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், அமலுவிஜயன், ஆம்பூர் நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அஹமத், துணைத்தலைவர் ஆறுமுகம், மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட அவைத் தலைவர் ஆனந்தன், பிர்தோஸ், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய தி.மு.க. அலுவலக திறப்பு விழா பெரியகம்மியம்பட்டு பகுதியில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மத்திய ஒன்றிய செயலாளர் க.உமா கன்ரங்கம் வரவேற்றார். அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தி.மு.க. அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். முன்னதாக அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, கட்சி கொடி ஏற்றினார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, ஆம்பூர் எம்.எல்.ஏ. ஏ.சி.வில்வநாதன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், நகர செயலாளர் அன்பழகன், நகரமன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story