4 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
4 போலீஸ் நிலையங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் நேற்று திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையம், ஆரணி டவுன் போலீஸ் நிலையம், போளூர் போலீஸ் நிலையம் மற்றும் தானிப்பாடி போலீஸ் நிலையம் என 4 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. மற்றும் க்யூ.சி.ஐ. தர சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ. மற்றும் க்யூ.சி.ஐ. தர சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் முன்னிலை வகித்தார். இதில் தர சான்றிதழ்கள் ஆய்வு குழுவினரிடம் இருந்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் போலீஸ் நிலையத்தை சார்ந்த சப்- இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டார்.
ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ்
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறுகையில், ''திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது 4 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. மற்றும் க்யூ.சி.ஐ. தர சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கும் ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
ஐ.எஸ்.ஓ. தர சான்று குழுவினரால் போலீஸ் நிலையங்களின் உட்கட்டமைப்பு, போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே உள்ள இணக்கமான செயல்பாடுகள், போலீஸ் நிலையத்தில் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகள் குறைப்பது போன்றவை குறித்து முறையாக ஆய்வு செய்யப்பட்டு இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த போலீஸ் நிலையங்களில் இருந்த சுமார் 60 முதல் 70 சதவீதம் நிலுவை வழக்குகள் குறைக்கப்பட்டு உள்ளது.
39 போலீஸ் நிலையங்கள்
ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ்கள் பெறுவதன் மூலம் பொதுமக்களுக்கு போலீஸ் நிலையத்தின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 39 போலீஸ் நிலையங்களும் ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது'' என்றார்.