இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் தேர்வு: பழங்குடியின மாணவர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி


இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் தேர்வு: பழங்குடியின மாணவர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

'இஸ்ரோ' அளிக்கும் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

நீலகிரி

கோத்தகிரி

'இஸ்ரோ' அளிக்கும் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவர்கள் தேர்வு

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்திய தொழில்நுட்ப காங்கிரஸ் சங்கம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தயாரிக்கும் 75 சிறிய வகை செயற்கைக்கோள்களை இஸ்ரோ ராக்கெட்கள் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழகத்தில் இருந்து 5 செயற்கைக்கோள்கள் வடிவமைத்து அனுப்பப்பட உள்ளன. அதில் ஒரு செயற்கைக்கோள், முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்களிப்பில் தயாராக உள்ளது. பிரம்மோஸ் மையத்தின் நிறுவனரும், மூத்த விஞ்ஞானியுமான ஏ.சிவதாணுப் பிள்ளை தலைமையின்கீழ் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆர்.எம்.வாசகம், கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் வழிகாட்டுதலின்படி இந்த மாணவர் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 26 மாவட்டங்களில் இருந்து 86 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

விண்வெளி சுற்றுலா

சுற்றுச்சூழல் பயன்பாட்டுக்காக சுமார் 1.5 கிலோ எடையில் தயாரிக்கப்பட உள்ள சிறிய செயற்கைக்கோளுக்கு 'அகஸ்தியர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோள் தயாரிப்பு பணிகளைப் பார்வையிடவும், செயற்கை கோள்கள் பற்றி தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், கெங்கரை ஊராட்சித் தலைவர் முருகன், சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இஸ்ரோவிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு இஸ்ரோ அனுமதியும் அளித்தது. இதையடுத்து கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி 10ம் வகுப்பு மாணவன் ராஜன், மாணவி ரேவதி, கெங்கரை அரசு உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் சரவணன், மாணவி மஞ்சுளா, கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி 12 ம் வகுப்பு மாணவன் சரவணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 5 பேரும் ஆதிவாசி பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் ஆன்லைன் மூலம் செயற்கை கோள் தயாரிப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த வகுப்புக்களை எடுத்தனர். மேலும் இந்த செயற்கைக்கோள் தயாரிப்புக்காக மாணவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு மாணவர்கள் 4 நாட்கள் விண்வெளி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

2-ம் கட்ட பயிற்சி

இந்நிலையில் இந்த மாணவர்களுக்கு 2-ம் கட்டமாக சென்னையில் 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் இன்று சென்னை ஐ. ஐ.டி யில் உள்ள ஜீரோ கிராவிடி சென்டரில் (பூஜ்ய ஈர்ப்பு மையம்) பார்வையிட வாய்ப்பு கிடைத்துள்ளது. நாளை சென்னையில் உள்ள உலகிலேயே பெரிய சார்ஜர் உற்பத்தி நிறுவனத்தை அவர்கள் பார்வையிடுகின்றனர். நாளை மறுநாள் ஹிந்துஸ்தான் எரோனடிக்ஸ் ஆய்வகத்தில் சேட்டிலைட் தயாரிப்பு முறையை காணும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அப்துல் கலாம் மாணவர் செயற்கை கோள் தயாரிப்பு அமைப்பின் மூலம் மகாபலிபுரம் சென்று அங்கு செயற்கை கோள் தயாரிப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 19-ந் தேதி பிர்லா கோளரங்கதிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, வானியல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story