150 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்
150 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
குன்னம் பகுதியில் சுற்று பயணம் மேற்கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கருப்பட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.19 லட்சம் செலவில் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் மாணவ- மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை பரிசாக வழங்கினார். அதனை தொடர்ந்து துங்கபுரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் செலவில் 2 சிமெண்டு சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்தார். பின்னர், வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (வேப்பூர் வட்டம்) இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். முகாமில் 36 வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பங்கு கொண்டன. முகாமில் 822 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட 150 பேருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பணி நியமன ஆணையை வழங்கி பேசினார். மேலும் வேப்பூர் அரசு கலைக்கல்லூரி மாணவிகளின் நலன் கருதி அங்குள்ள நூலகத்திற்கு அதிக புத்தகங்கள் வைப்பதற்கு போதுமான அலமாரி இல்லை என்பதை அறிந்த அமைச்சர் தனது அறக்கட்டளை சார்பில் 7 புத்தக அலமாரிகளை இலவசமாக வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன திறன் பேசிகளை வழங்கினார்.