வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதிக்கும் விவகாரம்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இந்த தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதித்து சென்னை மாநகர காவல் துறை பிறப்பித்த உத்தரவில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாகவும் இந்த உத்தரவு சென்னைக்குள் மட்டும் பொருந்துமா? அல்லது மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்துமா? என்று விளக்கப்படவில்லை.
கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை. வாகனங்களின் முன்பக்கம், பின்பிக்க கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஸ்டிக்கர்களாக ஒட்ட தடை விதிக்க வேண்டும், .பேருந்துகளின் பின்புறம் மற்றும் இருபுறங்களில் வணிக விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுநல மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.