சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு அதிகாரிகளே பொறுப்பு: தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பொது தீட்சிதர்கள் அறிக்கை
கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், நடராஜர் கோவிலில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளே பொறுப்பு என்றும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் பொது தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் சிகர திருவிழாவான ஆனிதிருமஞ்சன தரிசனம் நடைபெற்றது.
இதற்கிடையே கடந்த 24-ந்தேதி, மூலவர் நடராஜரை தரிசனம் செய்யும் வகையில், கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டது. அதாவது 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரைக்கும் கனகசபை மீது ஏறி சாமிதரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
10 தீட்சிதர்கள் மீது வழக்கு
மேலும் சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சரண்யா தலைமையில் போலீசார் அந்த பலகையை அகற்ற முயன்றனர். அப்போது அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரண்யா சிதம்பரம் நகர போலீசில் அளித்த புகாரின் பேரில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் சிவராமதீட்சிதர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், கனகசபை முன்பு தீட்சிதர்கள் வைத்திருந்த அறிவிப்பு பலகையை அதிரடியாக அகற்றினர். அதன் பின்னரும், பக்தர்களை அங்கு சென்று தரிசிக்க தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதம்
இந்த சூழ்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் திடீரென தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா தலைமையில் துணை தலைவர்கள் ஆர்.சம்பந்த மூர்த்தி, ஜி.ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமராட்சி ரங்கநாதன், வட்டார தலைவர் பகவத்சிங், பரங்கிப்பேட்டை வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜன், ஓ.பி.சி. அணி நகர தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய முயன்றனர்.
அப்போது, தீட்சிதர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர், தீட்சிதர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சித்சபை நடை சாத்தப்பட்டது என்பதால் தீட்சிதர்களும், போலீசாரும் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை
இதற்கிடையே, நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக எங்கள் தரப்பு நிலையை அதிகாரிகளிடம் விளக்கமாக தெரிவித்தோம். ஆனால் அதை பொருட்படுத்தாமல் எங்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக, பொது தீட்சிதர்களின் செயலாளர் மற்றும் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள்.
மேலும் நேற்று முன்தினம் மாலை, எங்களிடம் ஆலோசிக்காமல், எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார், இந்து சமய அறநிலையத்தறை அதிகாரிகள் முன்னிலையில் துறை சார்ந்த அடையாளம் தெரிந்த நபர், கனகசபை படி மீது ஏறி, அங்கிருந்த அறிவிப்பு பலகையை அகற்றி உள்ளார். மேற்கண்ட சம்பவம் நடைபெற்ற போது நாங்கள் யாரும் அந்த இடத்தில் இல்லை. எனவே பதற்றமான சம்பவங்கள் மேலும் தொடராமல் இருக்க உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும். மேற்படி அறிவிப்பு பலகையை அகற்றியவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.
அறிக்கை
மேலும், கோவிலில் நடந்த நிகழ்வு தொடர்பாக பொது தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் டிஎஸ்.சிவராமதீட்சிதர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஆனி திருமஞ்சன உற்சவம் நடைபெறும் சமயத்தில், பூஜை மற்றும் பக்தர்கள் வழிபாடுகளை இடையூறு செய்யும் நோக்கில், கோவில் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து செய்யும் இடையூறு நடவடிக்கை மற்றும் தூண்டுதல் காரணமாக இந்து சமய அறநிலையத்துறையினர், அவர்களுக்கு உதவியாக காவல் துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை நடராஜர் கோவிலுக்குள் அழைத்து வந்துள்ளனர். இதன் மூலம், அச்சுறுத்தல் செய்து நாங்கள் பூஜை செய்வதற்கு இடையூறு செய்கிறார்கள்.
பாதுகாப்பற்ற சூழ்நிலை
இதுபோன்று அச்சுறுத்துவது சட்ட விரோத நடவடிக்கையாகும். கோவிலில் இதன் காரணமாக ஏற்படும் எந்தவித அசம்பாவித நிகழ்வுகளுக்கும் காவல் துறையும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுமே பொறுப்பு ஆவார்கள். நாங்கள் அனைவரும் அமைதியாக பூஜை மற்றும் வழிபாடு முறைகளை மட்டுமே செய்து வருகிறோம். தற்போது எங்களது நிலை பாதுகாப்பற்ற சூழ்நிலையாக உள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளாா்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொடர்ந்து பிரச்சினை நிலவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவில் வளாக பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.