கடலில் மூழ்கி ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் சாவு


கடலில் மூழ்கி ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 2 ஐ.டி. ஊழியர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். பாறையை பிடித்த நிலையில் தத்தளித்த பெண்ணை போலீசார் மீட்டனர்.

கன்னியாகுமரி

பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 2 ஐ.டி. ஊழியர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். பாறையை பிடித்த நிலையில் தத்தளித்த பெண்ணை போலீசார் மீட்டனர்.

ஐ.டி. ஊழியர்கள்

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த 10 ஊழியர்கள் கடந்த 31-ந் தேதி வேனில் சுற்றுலா புறப்பட்டனர். தமிழகத்தில் ராமேசுவரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு நேற்று அதிகாலையில் கன்னியாகுமரிக்கு வந்தனர். அங்கு விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு அனைவரும் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றனர்.

சன்செட் பாயிண்ட் பகுதியில் கடற்கரையில் நின்றபடி சிறிது நேரம் கடல் அழகை ரசித்த அவர்களுக்கு ஆர்வமிகுதியில் கடலில் குளிக்கும் எண்ணம் ஏற்பட்டது. இதில் சிலர் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தனர்.

அலையில் சிக்கினர்

அந்த சமயத்தில் திடீரென சீறி வந்த ராட்சத அலையில் பெங்களூரு எலக்ரானிக் சிட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 35), பெங்களூரு ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த மணி (32) மற்றும் கர்நாடகா மாநிலம் அலகாட்ரா பகுதியை சேர்ந்த பிந்து (25) என்ற பெண் ஆகிய 3 பேரும் சிக்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்தனர். தங்கள் கண்முன்னே நண்பர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதை பார்த்து கதறி அழுதனர்.

உடனே அருகில் நின்ற சுற்றுலா பயணிகள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிந்து ஒரு பாறையை பிடித்தப்படி தத்தளித்து கொண்டிருந்தார். அவரை போலீசார் மீட்டு கரையில் சேர்த்தனர்.

2 பேர் சாவு

ஆனால் மற்ற 2 பேரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். சுமார் ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பின்பு சுரேஷ், மணி ஆகிய 2 பேரையும் பிணமாகத் தான் மீட்க முடிந்தது.

இந்த உடல்களை பார்த்து சக ஊழியர்கள் கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

பின்னர் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே காப்பாற்றப்பட்ட பிந்து சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த மணிக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இதேபோல் சுரேசும் திருமணமானவர். சிகிச்சை பெற்று வரும் பிந்து திருமணமாகாதவர் என்பது தெரியவந்தது.

சோகம்

மேலும் இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியது.


Next Story