தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை என்று கூற முடியாது -பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
எங்கள் கூட்டணி தேசிய அளவிலானது என்றும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை என்று கூற முடியாது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னையில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்திற்கு பின்னர் பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக சந்திப்பதற்கு என்ன என்ன விஷயங்களை கவனம் கொடுத்து செய்ய வேண்டும் என்பதை குறித்து விவாதிக்கப்பட்டது. கருத்துகள் சொல்லப்பட்டிருக்கிறது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு வெற்றிகரமான அடியை எடுத்து வைக்க வேண்டும். 3-வது முறையும் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என்கிற வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு 7 மாத காலம் உள்ள நிலையில் அதற்கு உண்டான பணிகள் வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
முழு மூச்சோடு பணி
அதன் அடிப்படையில் வருகின்ற தேர்தலை சந்திப்பதற்கு பா.ஜ.க.வை சேர்ந்த அனைவரும் முழு மூச்சோடு களம் இறங்கி பணி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே இருக்கிறது அதை பற்றி பேசப்பட்டது. தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்தி கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிபெறச் செய்ய என்னென்ன விஷயங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டீ குடிப்பது போல் அல்ல
அ.தி.மு.க.வில் 2 கோடி பேர் இருப்பதாக கூறுகிறார்கள். 2 கோடி கருத்துகள் வரும். எங்கள் கட்சியில் லட்சக்கணக்கானோர் உள்ளனர். லட்சக்கணக்கான கருத்துகள் வரும். அவற்றிற்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது டீ குடிப்பது போன்று வந்து பேசிவிட்டு செல்லும் விஷயம் அல்ல. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது வெளியிடுவோம். தேசிய ஜனநாயக கூட்டணி என்பது தேசிய அளவிலானது. தமிழ்நாட்டிற்கு என்று தனி பா.ஜ.க.வோ, தனி தேசிய ஜனநாயக கூட்டணியோ இல்லை. எனவே தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை என்று கூற முடியாது.
அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வந்தது பின்னடைவு என்று நாங்கள் பார்க்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை எவ்வாறு வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தான் இந்த கூட்டத்தின் நோக்கமே தவிர மற்ற கட்சிகள் குறித்து பேசுவதற்கு இந்த கூட்டம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.