கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளுக்கு இன்று வாக்குப்பதிவு
கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளுக்கு இன்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. அதன்படி கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 1, 2, 11 ஆகிய வார்டுகளில் இறுதி வேட்பாளர் பட்டியலில் தலா ஒரு சுயேச்சை வேட்பாளர் மட்டும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் பேரூராட்சி தேர்தலை பல்வேறு பிரச்சினை காரணமாக மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து 1,2,11-வது வார்டு சுயேச்சை வேட்பாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு, தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்தது. 1, 2 மற்றும் 11-வது வார்டுகளில் சுயேச்சையாக போட்டியிட்ட நாகராஜா, ராஜலட்சுமி, சிவக்குமார் ஆகியோரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாகவும், மற்ற 9 வார்டுகளுக்கும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை கொண்டு தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டது.
வாக்குப்பதிவு
அதன்பேரில் மாநில தேர்தல் ஆணையம் 9 வார்டுகளுக்கான தேர்தலை அறிவித்தது. 9 வார்டுகளில் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) 9 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வாக்குச்சாவடிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. இன்று காலையில் வாக்குப்பதிவு நடக்கிறது. தொடர்ந்து பதிவான வாக்குகள் வருகிற 1-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.