பள்ளி கட்டிட மேற்கூரையை இடித்து 5 மாதம் ஆச்சு...! நரிக்குறவ மாணவர்களின் கல்வி கேள்வி குறியாச்சு...!


பள்ளி கட்டிட மேற்கூரையை இடித்து 5 மாதம் ஆச்சு...! நரிக்குறவ மாணவர்களின் கல்வி கேள்வி குறியாச்சு...!
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி கட்டிட மேற்கூரையை இடித்து 5 மாதம் ஆச்சு...! நரிக்குறவ மாணவர்களின் கல்வி கேள்வி குறியாச்சு என்று பெற்றோா் குறை சொல்கிறாா்கள்.

விழுப்புரம்

கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நெல்லையில் தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களையும் ஆய்வு செய்து உறுதி தன்மையற்ற கட்டிடங்களை இடித்து அகற்ற அரசு உத்தரவிட்டது.

சேதமடைந்த கட்டிடம்

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு அந்த கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 1,806 பள்ளிகள் உள்ள நிலையில் சேதமடைந்த கட்டிடங்கள் கணக்கெடுப்பு பட்டியலின்படி அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 363 கட்டிடங்களும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 104 கட்டிடங்களும் சேதமடைந்த கட்டிடங்கள் என கண்டறியப்பட்டு அவை இடிக்கப்பட்டன.

ஆசாகுளம் பள்ளி

அந்த வகையில் விழுப்புரம் ஆசாகுளம் பகுதியில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு பள்ளிக்கூட கட்டிடத்தின் மேற்கூரை அமைக்கப்படவில்லை. இது பற்றி காண்போம்.

ஆசாகுளத்தில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 2001-ம் ஆண்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளி கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது பராமரிப்பு செய்யாமல் விட்டுவிட்டனர்.

மேற்கூரை அகற்றம்

இதன் விளைவு அப்பள்ளி கட்டிடத்தின் உள்பகுதி மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து கட்டிடம் பலவீனமானது. அதுமட்டுமின்றி சிமெண்டு காரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழுந்ததால் மாணவ- மாணவிகள் மிகவும் அச்சத்துடன் படித்து வந்தனர். இதனால் அப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய மேற்கூரையுடன் பள்ளியை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அப்பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகள் கல்வியை தொடர்ந்து பயில ஏதுவாக அதே பகுதியில் ஒருவரின் வீட்டிற்கு பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு மாணவ- மாணவிகளுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது.

இதனிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிக்கப்பட்டது. அதனை சீரமைக்க ஒப்பந்தம் விடப்பட்டதாக தெரிகிறது. ஆனால் நிதி ஒதுக்கப்படாததால் பள்ளி கட்டிடத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிலர் அங்கு துவைத்த துணிகளை காயவைப்பது உள்ளிட்ட செயலுக்கு கட்டிடத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

விரைந்து சீரமைக்கப்படுமா?

இதன் காரணமாக தற்காலிகமாக ஒரு வீட்டில் இயங்கி வரும் பள்ளியில் போதிய இடவசதியின்றி மாணவ- மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Next Story