அறுவடைக்கு தயாரான பருத்தி மழையில் நனைந்து வீணாகும் அவலம்


அறுவடைக்கு தயாரான பருத்தி மழையில் நனைந்து வீணாகும் அவலம்
x
தினத்தந்தி 19 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 6:45 PM GMT)

பொறையாறு பகுதியில் அறுவடைக்கு தயாரான பருத்தி மழையில் நனைந்து வீணாகும் என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

பொறையாறு பகுதியில் அறுவடைக்கு தயாரான பருத்தி மழையில் நனைந்து வீணாகும் என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

பரவலான மழை

செம்பனார்கோவில், தரங்கம்பாடி, பொறையாறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்தது. கத்திரி வெயில் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்ததால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில், தரங்கம்பாடி, பொறையாறு, சங்கரன்பந்தல், மேலப்பாதி, பரசலூர், விசலூர், ஆறுபாதி, தில்லையாடி, திருவிடைக்கழி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர்.

அறுவடைக்கு தயாரான..

இந்த மழையால் சுட்டெரித்த வெயிலின் வெப்பம் தணிந்து மிதமான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மூலம் குறுவை சாகுபடி பணியை தொடங்கி உள்ள விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தாலும் மறுபுறம் செம்பனார்கோவில் வட்டாரத்தில் பருத்தி செடிகளில் பூ பூத்து, காய் காய்த்து பருத்தி பஞ்சு வெடித்து அறுவடைக்கு தயாராக உள்ள பருத்தி இந்த மழையில் நனைந்து வீணாகி மகசூல் இழப்பு ஏற்படும் என்று வருத்தம் தெரிவித்தனர். பருத்தி செடிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் தொடர்ந்து மழை பெய்தால் பருத்தி செடிகளின் வேர்கள் அழுகி விடும். மேலும் மாவு பூச்சிகள், சப்பாத்தி பூச்சிகள் பருத்தி செடிகளை தாக்கி வருகிறது என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


Next Story