நாய்க்குட்டியை காப்பாற்ற முயன்றவர் நீரில் மூழ்கி இறந்த பரிதாபம்
கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்ற முயன்றவர் நீரில் மூழ்கி இறந்தார்.
காட்பாடி ஜாப்ராபேட்டை ஜி.என்.நகர் மணவாளமோடு பகுதியை சேர்ந்தவர். குமரேசன் என்கிற வல்லரசு (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு ரேவதி என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் இவருடைய வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றிற்கு அருகே நாய்க்குட்டி ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த நாய்க்குட்டி கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டது.
அதனை பார்த்த குமரேசன் கயிறு மூலம் வாளியை கட்டி நாய் குட்டியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் எதிர்பாரத விதமாக நிலை தடுமாறி கிணற்றில் விழுந்து விட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்து விட்டார்.
இது குறித்து விருதம்பட்டு போலீசாருக்கும், காட்பாடி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் விழுந்து பலியான குமரேசன் உடலை மீட்கும் பணியில் நேற்று முன்தினம் முழுவதும் ஈடுபட்டனர். இருப்பினும் உடலை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் நேற்று பாதளசங்கலியை கொண்டு வந்து குமரேசன் உடலை தேடினர். இருந்தும் கிடைக்காததால் கிணற்றின் நீரை வடியவைத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.