மோட்டார் சைக்கிளோடு சேர்த்து சாலை அமைத்த அவலம்


மோட்டார் சைக்கிளோடு சேர்த்து சாலை அமைத்த அவலம்
x

வேலூர் பேரி காளியம்மன் கோவில் தெருவில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

வேலூர்

வேலூர் பேரி காளியம்மன் கோவில் தெருவில் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் இணைப்பு, ஸ்மார்ட் சாலைகள் அமைத்தல், கோட்டை அழகுபடுத்துதல், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்தல், பூங்காக்களை நவீனப்படுத்துதல் உள்பட 52 பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு சுமார் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் சரியான திட்டமிடுதல் இல்லாததால் சுமார் 3 ஆண்டுகளாகியும் முடிவடையவில்லை.

வேலூர் வள்ளலார் சவுத் அவென்யூ சாலையோரம் பயன்பாடற்ற நிலையில் காணப்பட்ட அடிபம்பை அப்புறப்படுத்தாமல் நடைபாதை அமைக்கப்பட்டது. அதேபோன்று வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகத்துக்கு செல்லும் பாதையில் காணப்பட்ட மின்கம்பத்தை அகற்றாமல் தார்சாலை போடப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலட்சியம் வேலூர் மாநகர மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அதேபோன்று ஒரு சம்பவம் வேலூர் பேரி காளியம்மன் கோவில் தெருவில் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை அகற்றாமல் சாலை

வேலூர் நகரில் வணிகம் அதிகம் நடைபெறும் தெருக்களில் பேரி காளியம்மன் கோவில் தெருவும் ஒன்றாகும். இங்கு ஜவுளிக்கடைகள், வெள்ளி, தங்க நகைக்கடைகள் மற்றும் பட்டறை, வீட்டு உபயோக பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் ஏராளமாக உள்ளன. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நள்ளிரவில் எவ்வித முன்அறிப்பும் இன்றி பேரி காளியம்மன் கோவில் தெருவில் திடீரென சிமெண்டு சாலை போடப்பட்டது.

இந்த தெருவில் தங்க நகை செய்யும் கடை வைத்துள்ள யுவராஜ் என்பவர் கடையின் முன்பு இரவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தாமல் அப்படியே சாலை போடப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளின் இரு சக்கரமும் சிமெண்டு கலவையில் புதைந்திருந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தாமல் சாலை அமைக்கப்பட்டதை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இது சிறிதுநேரத்திலேயே வைரலானது.

கமிஷனர் ஆய்வு

தகவலறிந்த வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அதனை பார்வையிட்டு சாலையை ஆய்வு செய்தார். தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் குற்றம் சாட்டினர். அதையடுத்து கமிஷனர், சாலை பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரை செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தார்.

மேலும் அங்கு மீண்டும் தரமாக சாலை அமைக்கும்படி அறிவுறுத்தினார். அதையடுத்து சிறிதுநேரத்தில் மோட்டார் சைக்கிள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அந்த இடத்தில் சிமெண்டு கலவை கொட்டப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி வணிகர்கள், பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story