குழாய் வழியாக மாடிக்கு ஏறிய வாலிபர் தவறிவிழுந்து இறந்த பரிதாபம்


குழாய் வழியாக மாடிக்கு ஏறிய வாலிபர் தவறிவிழுந்து இறந்த பரிதாபம்
x

நாட்டறம்பள்ளி அருகே போன்செய்தும் மனைவி கதவை திறக்காததால் பைப் வழியாக மாடிக்கு ஏறிய வாலிபர் தவறிவிழுந்து இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

தவறி விழுந்தார்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த தாயப்பா கவுண்டர் தெரு, வி.ஐ.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் தென்னரசு (வயது 30). மசாலா பொடி விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் தென்னரசு அவருடைய நண்பர்கள் இளையராஜா மற்றும் வினோத் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு திருமணத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் நள்ளிரவில் வீடு திரும்பினர்.

வீட்டின் 'காலிங்பெல்' வேலை செய்யாததால், தென்னரசு தனது மனைவிக்கு போன் செய்துள்ளார். பலமுறை போன் செய்தும் அவர் போனை எடுக்காததால், தென்னரசு 3-வது மாடிக்கு செல்வதற்காக வீட்டின் பின்புறமாக உள்ள பைப் வழியாக ஏறி சென்றுள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

சாவு

இந்த நிலையில் கணவர் வெகுநேரமாகியும் வரவில்லை என்று புனிதா தனது அண்ணனுக்கு போன் செய்துள்ளார். உடனே அவர் தென்னரசு வீட்டிற்கு வந்து, தென்னரசுக்கு போன் செய்துள்ளார். அப்போது வீட்டின் பின்புறத்தில் இருந்து போன் சத்தம் வந்ததால் அங்கு சென்று பார்த்த போது தென்னரசு ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து. அவரை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் மறியல்

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தென்னரசு அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக்கூறி அவரது உறவினர்கள் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு நாட்டறம்பள்ளி-வெலகக்கல்நத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.


Next Story