பிரதமர் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது


பிரதமர் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது
x

நாகநதியை மீட்டெடுத்தது குறித்து பிரதமர் பாராட்டியது மகிழ்ச்சி அளிப்பதாக, நாகநதி மீட்பு பணியில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

வேலூர்

புனரமைப்பு திட்டம்

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த அமிர்தியில் இருந்து நஞ்சுகொண்டாபுரம், நாகநதி, துத்திக்காடு, பாலாத்துவண்ணான், கீழ்அரசம்பட்டு, கண்ணமங்கலம் வழியாக ஆரணி செல்லும் நாகநதி ஆற்றில் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் ஆங்காங்கே நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்க வாழும் கலை அமைப்பினர் முயற்சி மேற்கொண்டனர். ஏதற்காக நாகநதி புனரமைப்பு திட்டம் என பெயர் சூட்டப்பட்டது.

ரீ சார்ஜ் வேலூர் என்ற திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நாகநதி, துத்திகாடு, நஞ்சுகொண்டாபுரம், கீழ்அரசம்பட்டு, சலமநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் அரசின் உதவியுடன் ஆற்றுப் படுகைகளில் ஆங்காங்கே நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட்டது. அதன் பிறகு இந்த கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் 4 மடங்கு உயர்ந்ததுடன், விவசாயமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

கோடை காலங்களிலும் இந்த கிராமங்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருந்தது இல்லை.

பிரதமர் பாராட்டு

இந்த நிலையில் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. அதில் பேசிய பிரதமர் நாக நதியை குறிப்பிட்டு பேசினார். அப்போது 'நாகநதி' கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது. நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மேற்கொண்ட முயற்சியால் இன்று நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. வேலூர் நாகநதியை சுத்தம் செய்ய 20 ஆயிரம் பெண்கள் ஒன்றாக கைகோர்த்துள்ளனர். இதுபோன்ற செயல்கள் பெண்களின் ஆளுமை திறனை காட்டுகின்றன என பெண்களை பாராட்டி பேசினார்.

பிரதமர் மோடியின் உரை வேலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இதுகுறித்து நாக நதி மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:-

மகிழ்ச்சி அளிக்கிறது

வறண்டு இருந்த ஆற்றில் தற்போது தண்ணீர் செல்கிறது. எங்கள் கிராமத்தில் கோடைகாலத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது. விவசாயமும் 4 மடங்கு செழித்துள்ளது. பெண்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பாரத பிரதமர் ஏற்கனவே பாராட்டினார். இருப்பினும் தற்போது 2-வது முறையாக மீண்டும் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றனர்.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே மனதின் குரல் நிகழ்ச்சியை பா.ஜ.க. மாநில செயலாளர் கார்த்தியாயினி, வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன், பொதுச்செயலாளர்கள் ஜெகன், பாபு, கவுன்சிலர் சுமதிமனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பெரிய திரை மற்றும் வானொலியில் கேட்டனர்.

வேலூர் சலவன்பேட்டை சூளைமேடு, பெருமுகை, வ.உ.சி.நகர், காந்திநகர் உள்பட மாவட்டம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் 700 இடங்களில் மனதின் குரல் நிகழ்ச்சியை காணவும், கேட்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story