மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
காலை உணவு திட்டம்
திருவண்ணாமலை நகராட்சி கீழ்நாத்தூரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் முருகேசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாணவர்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உணவினை ஊட்டி மகிழ்ந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற முதல்- அமைச்சர் 15 மாத காலமாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகிறார்.
இதில் மகத்தான திட்டமான முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை நகரில் அவர் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சியில் 17 பள்ளிகளிலும், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள 46 பள்ளிகளிலும் மற்றும் திருவத்திபுரம் நகராட்சியில் 7 பள்ளிகளிலும் என மொத்தம் 67 பள்ளிகளில் 3 ஆயிரத்து 517 மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக தொடங்கப்பட்ட இத்திட்டம் வருங்காலங்களில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.
முன்மாதிரியாக
தமிழகத்தில் முதற்கட்டடமாக 1,545 பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து சத்துக்களும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்திற்கும் தமிழகம் தான் முதன்மையாக திகழ்கிறது.
முன்னாள் முதல்- அமைச்சர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தினை கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டு பள்ளிகளில் உணவு வழங்கப்பட்டது.
கருணாநிதி 1989-90 காலங்களில் மாணவர்களுக்கு புரதச்சத்து கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் பள்ளிகளில் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது.
காலை வேளைகளில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சாப்பிடாமல் வரக்கூடாது என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு தொடங்கி வைக்கப்பட்ட காலை உணவு திட்டமானது மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
தாயுள்ளம் கொண்டவர்
தாயுள்ளம் கொண்டவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் பார்க்கிறேன். மாணவர்கள் வாழ்வில் பல்வேறு உயர் பொறுப்புகளில் வரவேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த முதல்- அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மு.பெ.கிரி எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திவேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, உதவி கலெக்டர் வெற்றிவேல், மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசு, நிர்வாகிகள் அருணை கன்ஸ்ட்ரக்ஷன் துரை வெங்கட், பிரியாவிஜயரங்கன், ஏ.ஏ.ஆறுமுகம், குட்டி புகழேந்தி, பா.ஷெரீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.