கொடைக்கானலில் வாட்டி வதைக்கும் கடும் குளிர்
கொடைக்கானலில் முன்கூட்டிேய பனி சீசன் தொடங்கியது. இதனால் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
கொடைக்கானலில் முன்கூட்டிேய பனி சீசன் தொடங்கியது. இதனால் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
முன்கூட்டியே பனி சீசன்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனி சீசன் நிலவுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டிய பனி சீசன் தொடங்கியுள்ளது. இதனால் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் நண்பகலில் மிதமான வெப்பமும், மாலை வேளையில் பனி மூட்டமும் நிலவியது. இரவில் கடும் குளிர் வாட்டியது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 10 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது.
உறைபனியின் ஆதிக்கம்
இந்தநிலையில் நேற்று அதிகாலை 10 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்பநிலை காணப்பட்டது. இதுமட்டுமின்றி உறைபனியின் ஆதிக்கம் அதிகரித்தது. மரம், செடி, கொடி, புற்களின் மீது உறைபனி அடைக்கலமானது.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான கீழ்பூமி, பாம்பார்புரம், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உறைபனி படர்ந்திருந்தது.
இந்த உறைபனியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். மேலும் தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
ரம்மியமான காட்சி
அதிகாலை நேரத்தில், கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உறை பனி ஆக்கிரமித்து இருந்தது. அதன்பிறகு ஆதவனின் முகத்தை கண்டதும், அங்கு குழுமி இருந்த பனிமூட்டம் அமைதியாக ஆவியாய் மேல்நோக்கி எழும்பியது.
விழிகளுக்கு விருந்து படைத்த இந்த ரம்மியமான காட்சி பலரையும் பரவசப்படுத்தியது. இதனை ஏரிச்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
குளிர் காய்ந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் உறைபனி மற்றும் கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குளிரை சமாளிக்க காலை வேளையில் தீமூட்டி குளிர் காய்ந்தனர்.
மேலும் பனிப்பொழிவில் இருந்து தப்பிப்பதற்காக ஸ்வெட்டர், ஜர்க்கின், தொப்பி போன்ற குளிருக்கு இதமான ஆடைகளை அணிந்து வலம் வந்தனர். வரும் நாட்களில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.