அ தி மு க அராஜகத்தின் கையில் சிக்கி அல்லல்படுகிறது
அ தி மு க தனது உரிமைகளை இழந்து அராஜகத்தின் கையில் சிக்கி அல்லல்படுகிறது என்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பிரசாரத்தில் சசிகலா பேசினார்
உளுந்தூர்பேட்டை
தொண்டர்களை பலியாக்குவதா?
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா நேற்று உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா கட்சிக்கு பொறுப்பேற்றபோது அ.தி.மு.க.வில் எத்தகைய மோசமான சூழ்நிலை நிலவியது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஜெயலலிதா பட்ட வேதனைகள், சோதனைகள் அனைத்தையும் உடனிருந்து பார்த்தவர் நான்.
நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் நிலையில் ஒளிர்ந்த அ.தி.மு.க.வின் இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும் வெட்கமும், கவலையும் படக்கூடியதாக உள்ளது.
அ.தி.மு.க. தற்போது தனது உரிமைகளை இழந்து அராஜகத்தின் கையில் சிக்கி அல்லல்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய 34 பதவிகளுக்கு நடக்க இருக்கும் தேர்தலில் தனிப்பட்ட ஒரு சிலரின் சுயநலத்தால் வெற்றியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு சிலரின் மேம்பட்ட அரசியலுக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா?.
இரட்டை இலை சின்னம்
உங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளுக்காக இரட்டை இலை சின்னத்தை முடக்க யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது?.
உங்களை வளர்த்த அ.தி.மு.க.வுக்கு நீங்கள் காட்டும் நன்றியா இது? அ.தி.மு.க.வை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று தி.மு.க.வினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். தற்போது நடப்பதை பார்த்தால் தி.மு.க.வின் திட்டங்கள் நிறைவேறிக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
தி.மு.க.வினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் பொறுமையாக இருக்கிறேன். வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையாக இருந்தால் இந்த இயக்கம் இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும் மக்களுக்காக இயங்கும் என்கிற ஜெயலலிதாவின் எண்ணம் ஈடேற வேண்டும்.
உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழித்துவிட முடியாது.
ஓராண்டு தி.மு.க. ஆட்சியில்...
தி.மு.க. தலைமையிலான ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற செய்திகள் நாள்தோறும் வருகின்றன. இதன் காரணமாக சட்டம்-ஒழுங்கு என்பது தமிழகத்தில் கேள்விக் குறியாக உள்ளது.
ஓராண்டு ஆட்சியில் தி.மு.க. எந்தவித மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அடையாளமாக அவர்கள் விட்டுச் சென்ற மிச்சமாக நான் இருக்கிறேன். அம்மா என்கிற பெண் சிங்கத்தின் குகையில் இருந்து வந்த வீர தமிழச்சியாக தமிழக மக்களை என் உயிர் உள்ளவரை காப்பேன் என்று இந்த மண்ணின் மகளாக உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவெண்ணெய்நல்லூர்
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கடைவீதி, பெரியசெவலை, அரசூர் கூட்டுரோடு ஆகிய இடங்களிலும் சசிகலா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியையும், கழகத்தையும் சிறப்பாக நடத்தினார்கள். சிலரால் கட்சிக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வினர் தொண்டர்களை வைத்து அராஜகம் செய்கின்றனர். திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கால்நடை மருத்துவமனை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இடவசதி திருவெண்ணெய்நல்லூரில் அனைத்து மகளிர் காவல் நிலையம், இருளர்களுக்கு சாதி சான்றிதழ், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்க வேண்டும், ஆனத்தூர் பகுதியில் கொய்யா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தொழிற்சாலை மற்றும் குளிரூட்டும் மையம் அமைத்து தரவேண்டும், இந்த கோரிக்கைகளை தற்போதைய அரசு செய்து தரவில்லை என்றால் விரைவில் நமது அரசு வந்தவுடன் செய்து தரப்படும் என்றார்.