திருச்சியில் இறந்த என்ஜினீயருக்கு கொரோனா இருந்தது உறுதி


திருச்சியில் இறந்த என்ஜினீயருக்கு கொரோனா இருந்தது உறுதி
x

திருச்சியில் இறந்த என்ஜினீயருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முககவசம் அணிந்து விழிப்புடன் இருக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

திருச்சி

திருச்சியில் இறந்த என்ஜினீயருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முககவசம் அணிந்து விழிப்புடன் இருக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

வேகமாக பரவும் காய்ச்சல்

தமிழகத்தில் எச்3 என்2 மற்றும் `இன்புளூயன்சா' பி வைரசால் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. உடல் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்யும் இந்த வகை காய்ச்சல் சில நேரங்களில் வந்த சுவடே தெரியாமல் போய் விடுகிறது. பல நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரை பறிக்கிற அளவுக்கு கோர முகத்தையும் காட்டுகிறது.

இந்த காய்ச்சலை கண்டறிய தமிழக சுகாதாரத்துறை காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மேலும் காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், அரசு ஆஸ்பத்திரிகளில் போதுமான படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.

என்ஜினீயர் சாவு

இந்தநிலையில் பெங்களூருவில் என்ஜினீயராக பணியாற்றி வந்த திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 10-ந்தேதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 11-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததும், தெரியவந்துள்ளது.

இதுபற்றி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு

திருச்சி சிந்தாமணியை சேர்ந்த வாலிபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் எச்1 என்1 வைரஸ் பாதிப்பு இருந்ததா? என்று கண்டறிய அவருடைய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவர், தனது நண்பர்களுடன் கோவா சென்றுவிட்டு, அங்கிருந்து திருச்சி வந்துள்ளார். அவர் இறந்த பிறகுதான் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அவர்களின் குடும்பத்தினரையும், அவருடன் தொடர்பில் இருந்த நண்பர்களையும் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

யாருக்கும் பாதிப்பு இல்லை

திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது காய்ச்சல் நோயால் தினமும் 15 முதல் 20 பேர் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு 86 பேர் எச்1 என்1 வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆண்டு இதுவரை 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்றைய நிலவரப்படி எச்1 என்1 வைரஸ் பாதிப்புடன் யாரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இல்லை.

விழிப்புணர்வு

தற்போது திருச்சி மாவட்டத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். பொதுஇடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

----


Related Tags :
Next Story