உழைத்தவர்களுக்கு கண்டிப்பாக இடம் அளிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் - ராஜன் பேட்டி
"உழைத்தவர்களுக்கு கண்டிப்பாக இடம் அளிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்" என சென்னையில் காங். ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் ஈரோடு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் கூறினார்.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். இடைத்தேர்தல் என்பதால் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரசாரத்திற்கு வர வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள். காங்கிரஸ் வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும்" என்றார்.
சென்னையில் காங். ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் ஈரோடு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எனக்கு கட்டாயமாக வேட்பாளராக போட்டியிட இடம் வேண்டும் என்று கேட்டுள்ளேன். தமிழக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் நான் என்னுடைய கோரிக்கையை அளித்துள்ளேன். உழைத்தவர்களுக்கு கண்டிப்பாக இடம் அளிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். எனது கோரிக்கையை பரிசீலிப்பதாக தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.