நிறுவனங்களின் உண்மை தன்மையை அறிந்து கொள்வது அவசியம்
வேலைக்காக வெளிநாடு செல்வோர் நிறுவனங்களின் உண்மை தன்மையை அறிந்து கொள்வது அவசியம் என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா அறிவுறுத்தி உள்ளார்.
வேலைக்காக வெளிநாடு செல்வோர் நிறுவனங்களின் உண்மை தன்மையை அறிந்து கொள்வது அவசியம் என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுற்றுலா விசா
தமிழ்நாட்டை சேர்ந்த உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களிடம் தாய்லாந்து, கம்போடியா மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள தொழில் நுட்ப நிறுவனங்களில் நல்ல வேலை, அதிக சம்பளம் தருவதாக கூறி சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச் சென்று, கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரண்சி மோசடியில் அவர்களை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வருவதாகவும், மறுக்கும் நிலையில், துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வருகின்றன.இனிவரும் காலங்களில், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, இளைஞர்கள் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி என முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
உண்மை தன்மை
தெரியாவிடில், தமிழக அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசின் வெளியுறவுத் துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளில் உள்ள இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின்படியும் வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து பணிக்காக வெளிநாடு செல்வோர், வெளிநாடு வாழ் தமிழர்கள் மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். உதவி தேவைப்படின் இத்துறையின் 9600023645, 8760248625 மற்றும் 044-28515288 ஆகிய தொடர்பு எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.