தமிழர் பண்பாட்டை மாணவர்களுக்கு உணர்த்துவது முக்கியமாகும்


தமிழர் பண்பாட்டை மாணவர்களுக்கு உணர்த்துவது முக்கியமாகும்
x

தமிழர் பண்பாட்டை மாணவர்களுக்கு உணர்த்துவது முக்கியமாகும் என கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தமிழர் பண்பாட்டை மாணவர்களுக்கு உணர்த்துவது முக்கியமாகும் என கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசினார்.

பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே புதிய மாநாட்டு மைய கட்டிடத்தில் மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசியதாவது:-

உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது என்பது ஆரோக்கியமான எதிர்கால சமூக கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.

இதனால் தமிழகம் முழுவதும் 100 கல்லூரிகளில் பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகளை கேட்டறிய வேண்டும். மேலும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் தவறாது படித்து பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சான்றிதழ்-பரிசு

இதைத்தொடர்ந்து கவித்தமிழ் என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் செந்தில்வேல் பேசினார். மேலும் தமிழ் பெருமிதம் என்ற சிற்றேட்டில் உள்ள துணுக்குகளை வாசித்து சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களை பாராட்டி பெருமித செல்வி, பெருமித செல்வன் என பட்டம் சூட்டி சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி சொற்பொழிவாளர்களிடம் கேள்விகளை எழுப்பிய மாணவர்களை பாராட்டி கேள்வின் நாயகி, கேள்வின் நாயகன் என பட்டம் சூட்டி சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் தனராஜன், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story