சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை கவர்னர் நிலுவையில் வைத்திருப்பது ஜனநாயகத்துக்கு புறம்பானது : அமைச்சர் துரைமுருகன்
தமிழக அரசின் மசோதாக்களை நிறைவேற்ற கவர்னருக்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்,
வேலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக கவர்னர்- நடிகர் ரஜினி சந்திப்பு வெளியே சொல்ல முடியாத அரசியல். தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை கவர்னர் நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருக்க கூடாது. சட்டமன்றத்தில் ஒரு முறைக்கு இருமுறை நிறைவேற்றிய மசோதாக்களை வைத்திருப்பது ஜனநாயகத்துக்கு புறம்பானது. அவர் தன்னை மற்றும் சட்டத்தை உணர்ந்து நீட் தேர்வு உள்ளிட்ட மசோதாக்களில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
தமிழக அரசின் மசோதாக்களை நிறைவேற்ற கவர்னருக்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பாலாற்றில் தற்போது தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. பாலாற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். மேல்அரசம்பட்டில் அணை கட்டுவதற்கு அடுத்தாண்டு நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.