ராமநாதபுரத்தில் ஒரு மணிநேரம் கொட்டிய மழை
ராமநாதபுரத்தில் நேற்று ஒருமணி நேரம் மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரத்தில் நேற்று ஒருமணி நேரம் மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏமாற்றம்
கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவை விட அதிகமாக பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அக்டோபர் இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அதிகபட்சமாக மழை பெய்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் ஒரு சில நாட்கள் மட்டும் அடைமழையாக பெய்த வடகிழக்கு பருவமழை அதன்பின்னர் நவம்பர் 10-ந் தேதிக்கு பின்னர் பெய்யவில்லை. மழைபெய்யும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு மழைபெய்யாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மழைபெய்யும் என்று விடாத நம்பிக்கையுடன் காத்திருந்த நிலையில் பனி பொழிவு ஏற்பட்டு வருகிறது. அதிகாலையில் அதிகபனி பொழிவு ஏற்பட்டுள்ளதால் நெற்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். தேவையான நேரத்தில் மழை பெய்யாமல் போனதால் நெற்பயிர்கள் முளைத்து நெல்மணிகள் வளர்ச்சி அடையாமல் இருப்பதாக வருத்தம் அடைந்துள்ளனர்.
பலத்த மழை
கடந்த காலங்களில் வழக்கமாக நவம்பர் மாதத்தில் பலத்த மழை பெய்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளாக ராமநாதபுரம் காட்சியளிக்கும். ஆனால் தற்போது அனைத்து பகுதிகளும் வறண்டு பொட்டல் காடுபோல காட்சியளிக்கிறது. கடந்த 18 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைபெய்யாமல் கோடை காலம்போல வெயில் வாட்டி வதைத்தது. பகல்நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் மக்களை வேதனை அடையச்செய்தது. இந்நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு திடீரென்று வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ராமநாதபுரம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்தது.
இதன் காரணமாக மாவட்டத்தில் கோடைகாலம்போல நிலவி வந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி அடைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் நெல்விவசாயத்திற்கு பயனில்லை என்று விவசாயிகள் வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.
தாமதமாக விவசாய பணிகளை மேற்கொண்ட ஒருசிலர் மழையால் தங்களின் பயிர் தற்போதைக்கு தப்பியதாக ஆறுதல் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் நகரில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனஓட்டிகள் அதனை கடந்து செல்வதற்கு சிரமம் அடைந்தனர். அதிகாலை முதல் மழை பெய்தபோதிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படாததால் மாணவ-மாணவிகள் நனைந்து கொண்டே பள்ளிகளுக்கு சென்றதை காணமுடிந்தது.