'கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்'
வருகிற 26-ந்தேதி கோடை விழா தொடங்குவதால், கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டார்.
ஆலோசனை கூட்டம்
கொடைக்கானல் கோடைவிழா-2023 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கொடைக்கானலில் கோடை விழா-2023 மற்றும் 60-வது மலர்க்கண்காட்சி ஆகியவை வருகிற 26-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 2-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மலர்க்கண்காட்சியும், 26-ந்தேதி முதல் ஜூன் மாதம் 2-ந்தேதி வரை கோடை விழாவும் நடக்கிறது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடக்கும் இந்த விழாவில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாவும் நடத்தப்பட இருக்கிறது. விழா நடைபெறும் நாட்களில் பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடிக்கும் போட்டி, நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
சிறப்பான ஏற்பாடு
மலர்க்கண்காட்சியை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். நகர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் கவனித்துக்கொள்ள வேண்டும். கோடை விழா நடக்கும் நாட்களில் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்க வேண்டும். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மருத்துவ குழுக்கள், 108 ஆம்புலன்சு சேவை, தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.