ஒரு சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்த 1½ மாதம் எடுக்கின்றனர்: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணையை இழுத்தடிக்கின்றனர் - மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. குற்றச்சாட்டு
வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்தில் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறுக்கு விசாரணையை இழுத்தடிக்கின்றனர் என்று மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. குற்றச்சாட்டு வைத்தது.
வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்தில் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறுக்கு விசாரணையை இழுத்தடிக்கின்றனர் என்று மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. குற்றச்சாட்டு வைத்தது.
சாத்தான்குளம் வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக 2020-ம் ஆண்டு அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு போலீசார் தாக்கியதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து, பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது.
இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் கைதானார்கள். அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் ஏற்கனவே பலமுறை தங்களுக்கு ஜாமீன் கேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியாகின.
இந்தநிலையில் சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:-
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன். இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ள 132 சாட்சிகளில், முக்கிய சாட்சிகளான பெண் போலீஸ் ரேவதி மற்றும் பியூலா உள்பட 47 சாட்சிகளிடம் மட்டுமே இதுவரை விசாரித்து இருக்கின்றனர். இந்த 47 சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்கே ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. மீதமுள்ள சாட்சிகளை விசாரிக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும். கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்கும்பட்சத்தில் கோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சி.பி.ஐ பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.
சி.பி.ஐ. குற்றச்சாட்டு
இந்த நிலையில் இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் சில சாட்சிகளை மட்டுமே விசாரணை செய்ய வேண்டியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் மீதான வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் 4 மாதங்களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில் வழக்கு விசாரணையை தாமதமாக்கி வருகின்றனர்.
ஒரு சாட்சியை விசாரணை செய்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் ஆகிறது. எனவே வருகிற மே மாத விடுமுறை காலத்திலும் இந்த வழக்கினை கீழ் கோர்ட்டு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என வாதாடினார். இதனையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.