ஐ.டி. ஊழியரை கொன்ற உறவினர் கைது


ஐ.டி. ஊழியரை கொன்ற உறவினர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ஐ.டி.ஊழியரை ெகாலை செய்த வழக்கில் உறவினரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த சென்னம்மநாயக்கன்பட்டி அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ராஜபாண்டி (வயது 32). பி.சி.ஏ. பட்டதாரி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். தற்போது இவர், வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வந்தார். ராஜபாண்டியின் தந்தை பாண்டியனின் சகோதரி அய்யம்மாள் (60). இவருக்கும், பாண்டியனுக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக கடந்த 7 ஆண்டுகளாக தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில் பூர்வீக சொத்து என்பதால், அந்த இடத்தில் அய்யம்மாள் வீடு கட்ட முடிவு செய்தார். இதற்கு ராஜபாண்டி எதிர்ப்பு தெரிவித்தார். அதில் அவர்களுக்கு இடையே நிலப்பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே அய்யம்மாளின் மகன் சக்திவேல் (30) தனக்கு சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும் எனக்கூறி ராஜபாண்டியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் ராஜபாண்டி மட்டும் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு சக்திவேல், அய்யம்மாள், சக்திவேலின் மனைவி சித்ரா (28) மற்றும் சக்திவேலின் நண்பர் பாலாஜி ஆகிய 4 பேரும் சென்றனர். சொத்து பிரச்சினை தொடர்பாக ராஜபாண்டியிடம் அவர்கள் தகராறு செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல், தான் வைத்திருந்த சம்மட்டியால் ராஜபாண்டியின் தலையில் ஓங்கி அடித்து படுகொலை செய்தார். பின்னர் அங்கு இருந்து சக்திவேல் உள்பட 4 பேரும் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜபாண்டியின் உறவினர் சக்திவேலை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அய்யம்மாள், சித்ரா மற்றும் பாலாஜி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story