ஈரோட்டில் 8 நாட்களாக நடந்தசுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்


ஈரோட்டில் 8 நாட்களாக நடந்தசுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
x

ஈரோட்டில் 8 நாட்களாக நடந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் ஆனது

ஈரோடு

ஈரோட்டில் 8 நாட்களாக நடந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

வேலைநிறுத்தம்

ஈரோடு மாநகர் பகுதியில் மஞ்சள் கிடங்குகள், ஜவுளி நிறுவனங்கள், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கான சரக்கு லாரி போக்குவரத்து நிறுவனங்கள், கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் என பல்வேறு நிலையில் 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் சார்பில் கூலி நிர்ணயிக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலியை உயர்த்தி ஒப்பந்தம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்காமலும், புதிய ஒப்பந்தம் போடப்படாமலும் உள்ளதாகக்கூறி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாபஸ்

இந்த போராட்டம் நேற்று 8-வது நாளாக தொடர்ந்தது. மேலும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈரோடு பார்க் ரோட்டில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். மேலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் இருதரப்பினரையும் அழைத்து நேற்று 2-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செல்போன் மூலம் நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது அவர், 'இது குறித்து எனது தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய தீர்வு காணப்படும்' என்று உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம் போல் வேலைக்கு செல்வார்கள்.


Next Story