கும்பல் தலைவன் உள்பட 2 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு


கும்பல் தலைவன் உள்பட 2 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் 4 ஏ.டி.எம். மையங்களிலும் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாருக்கு கிடைத்த தடயங்களின்படி இந்த கொள்ளை சம்பவத்தில் அரியானாவை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது.

மேலும் இதில் 6-க்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டதும் கொள்ளையர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் (கே.ஜி.எப்.) பகுதியில் தங்கியிருந்து திருவண்ணாமலைக்கு வந்து கண்காணித்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டதும், கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு அவர்கள் காரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கோலார் பகுதிக்கு தப்பி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் கர்நாடகா மாநிலத்திற்கு விரைந்தனர். மேலும் அரியானா, ஆந்திரா, குஜராத் ஆகிய பகுதிகளுக்கு தனிப்படை சென்றனர்.

7 காவலில் எடுக்க முடிவு

மேலும் கர்நாடகா மாநிலத்திற்கு தனிப்படை வந்ததை அறிந்த கொள்ளை கும்பல் தலைவன் தலைவன் அரியானா மாநிலம் நூ மாவட்டம் சோனாரி கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப் (வயது 35) மற்றும் புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆஜாத் (37) ஆகியோர் கோலார் பகுதியில் இருந்து பெங்களூரு வந்து அங்கிருந்து விமானத்தின் மூலம் அரியானாவிற்கு தப்பி சென்றனர்.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அரியானா மாநில போலீசார் உதவியுடன் அரியானா மாநிலத்தில் மேவாட் பகுதியில் பதுங்கி இருந்த அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை தனிப்படை போலீசார் அங்கிருந்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

வருகிற 3-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ள அவர்கள் இருவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திருவண்ணாமலை டவுன் போலீசார் முடிவு செய்து உள்ளதாகவும், அதற்காக இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ள போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அவ்வாறு காவலில் எடுத்து விசாரணை நடத்திய பின்னரே மீதமுள்ள கொள்ளையர்கள் எங்கு பதுங்கி உள்ளனர் என்ற தகவல்கள் வெளியே வரும் என்றும் கூறப்படுகிறது.

கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல்

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தடயங்களின்படி மேலும் 2 பேர் அரியானாவின் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அரியானாவில் முகாமிட்டு உள்ள தனிப்படை போலீசார் அவர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களின் எல்லை பகுதியில் மாடு திருடிய 2 பேரை காரில் வைத்து எரித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அரியானா பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தினால் அரியானாவில் பதுங்கியுள்ள 2 கொள்ளையர்களை பிடிப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் போலீசார் கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ல் போலீசார் ரூ.3 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்து உள்ளனர்.

மீதமுள்ள பணத்தை அவர்கள் எங்கு பதுக்கி வைத்து உள்ளனர் என்றும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story