'ராகு காலத்தில்தான் நான் திருமணம் செய்தேன்; சிங்கக்குட்டி போல் 2 பிள்ளைகள் உள்ளனர்' அமைச்சர் ருசிகர பேச்சு


ராகு காலத்தில்தான் நான் திருமணம் செய்தேன்; சிங்கக்குட்டி போல் 2 பிள்ளைகள் உள்ளனர் அமைச்சர் ருசிகர பேச்சு
x

‘ராகு காலத்தில்தான் நான் திருமணம் செய்தேன்; சிங்கக்குட்டி போல் 2 பிள்ளைகள் உள்ளனர்' என்று திருமண விழாவில் அமைச்சர் எ.வ.வேலு ருசிகரமாக பேசினார்.

சென்னை,

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 'இதயமும் இதயமும் இணையட்டும், எதிர்காலம் கலைஞரை புகழட்டும்' என்ற தலைப்பில் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 20 ஜோடிகளுக்கு சீர்வரிசை வழங்கி திருமணம் நடைபெற்றது. விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

அழைப்பிதழில் போடப்பட்டுள்ளபடி காலை 8 மணிக்கு இந்த திருமணம் நடைபெறவில்லை. அருகிலேயே சக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு இங்கு வருகிறேன். அமைச்சர் சேகர்பாபு இந்த திருமண விழாவை காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் நடத்திவிட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். அதுவும் நடைபெறவில்லை.

ராகு காலத்தில் செய்துகொண்டேன்

அப்படி பார்த்தால் பெரியார், அண்ணா, கருணாநிதி நேசித்த பகுத்தறிவு திருமணம்; சுயமரியாதை திருமணம் சரியாக நடைபெற்றுள்ளது. சுயமரியாதை திருமணத்திற்கும், பகுத்தறிவு திருமணத்திற்கும் எப்போதும் காலமும், நேரமும் கிடையாது. அதை சொல்வதால் ஆன்மிகத்தில் திளைத்திருக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கு உள்ளூர வருத்தம் இருந்தாலும் கூட சொல்லவேண்டிய கடமை, சொல்லவேண்டிய நிலைப்பாட்டில் இருக்கிறேன்.

இந்த மணமக்களுக்கு ஒரு தைரியத்தை சொல்லவேண்டும். உரிய நேரத்தில் இல்லாமல் காலம் கடந்து திருமணம் செய்கிறோம். மணமகளை பெற்ற தாய் என்ன நினைப்பாரோ? மணமகனை பெற்ற தாய் என்ன நினைப்பாரோ? என்ற அச்சத்தை போக்க நான் ஒன்றை சொல்கிறேன். நான் சுயமரியாதைக்காரன், நான் பகுத்தறிவு திருமணத்தை என் வாழ்க்கையில் செய்துகொண்டவன். எந்த நேரத்தில் என்றால் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலான ராகு காலத்தை பார்த்துதான் திருமணம் செய்துகொண்டேன்.

சிங்கக்குட்டி போல்...

எனக்கு குழந்தை பிறக்காமல் இருந்ததா? 2 ஆண் பிள்ளைகள் சிங்கக்குட்டி போல் இருக்கிறார்கள். ஒருவர் எம்.இ. என்ஜினீயரிங் படித்துவிட்டு, எங்கள் குடும்ப கல்வி நிறுவனங்களை எல்லாம் அவர்தான் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.

உழைக்கிற உழைப்புதான் மனித வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டு வருவதற்கான உந்துசக்தியாக அமையும். புற வாழ்க்கை குறித்து ஆண்கள் முடிவெடுக்க வேண்டும். அக வாழ்க்கை என்ற குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை பெண்கள்தான் முடிவு எடுக்கவேண்டும். குடும்ப வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பெண்கள்தான் முடிவெடுக்க வேண்டும். பெண்கள் பேச்சை கேட்டால்தான் குடும்பம் உருப்படும்.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

சீர்வரிசை திருமண நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story