மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த 148 விநாயகர் சிலைகள் பவானி ஆற்றில் கரைப்பு


மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த 148 விநாயகர் சிலைகள் பவானி ஆற்றில் கரைப்பு
x

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த 148 விநாயகர் சிலைகள் பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.

ஈரோடு

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த 148 விநாயகர் சிலைகள் பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன.

அந்தியூர்

அந்தியூர் மற்றும் வெள்ளித்திருப்பூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியன்று 5 அடி முதல் 10 அடி உயரம் வரை உள்ள 29 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கடந்த 3 நாட்களாக இந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக பவானி ரோட்டில் உள்ள மங்களம் நகரில் அனைத்து சிலைகளும் டிராக்டரில் கொண்டுவரப்பட்டன. பின்னர் 29 சிலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலமாக அணிவகுத்து சென்றன. பவானி ரோடு, சத்தி ரோடு, சிங்கார வீதி, தேர் வீதி, பர்கூர் ரோடு, அத்தாணி ரோடு வழியாக மேள தாளங்கள் முழங்க பவானி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அனைத்து சிலைகளும் ஆற்றில் கரைக்கப்பட்டன.

பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்வலத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கடத்தூர்

கோபி பகுதியில் விநாயகர் சதுர்த்தி அன்று அனுமன் சேனா சார்பில் 19 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 3 நாட்கள் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. கோபியில் உள்ள சத்தி ரோடு லக்கம்பட்டி பிரிவு பகுதியில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. மேளதாளங்களுடன் நல்லகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம் வழியாக கோபி அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றுக்கு அனைத்து சிலைகளும் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கோபி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

பெருந்துறை

விநாயகர் சதுர்த்தியையொட்டி பெருந்துறை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் 33 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கடந்த 3 நாட்களாக சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. முன்னதாக பெருந்துறை கோட்டை முனியப்பன் கோவில் வளாகத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. ராஜவீதி, குன்னத்தூர் ரோடு, பவானி ரோடு வழியாக 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பவானி கூடுதுறை காவிரி ஆற்றுக்கு மேள தாளங்கள் முழங்க சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை பெருந்துறை ஒன்றிய இந்து முன்னணியினர் செய்திருந்தனர். ஊர்வலத்தையொட்டி பெருந்துறையில் இருந்து பவானி கூடுதுறை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கொடுமுடி

கொடுமுடி பகுதியில் இந்து முன்னணி சார்பில் 17 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. கடந்த 3 நாட்களாக இந்த சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக அனைத்து சிலைகளும் வாகனங்களில் கொடுமுடி பழைய பஸ்நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் ஊர்வலம் புறப்பட்டு பைபாஸ் சாலை, புதிய பஸ் நிலையம் வழியாக மகுடேஸ்வரர் கோவில் முன்பு உள்ள காவிரி கரையை அடைந்தது. பின்னர் ஆற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. கொடுமுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக அனைத்து சிலைகளும் சத்தியமங்கலத்தில் உள்ள எஸ்.ஆர்.டி. கார்னருக்கு வாகனங்களில் கொண்டுவரப்பட்டன.

மேளதாளங்கள் முழங்க அங்கிருந்து தொடங்கிய ஊர்வலம் எஸ்.ஆர்.டி.கார்னர், பஸ் நிலையம், ஆற்றுப்பாலம், சின்ன ரோடு, கோட்டூவீராம்பாளையம், கடைவீதி, பழைய மார்க்கெட், மணிக்கூண்டு, சத்யா தியேட்டர் ரோடு, வரதம்பாளையம், வடக்குப்பேட்டை, அத்தாணி ரோடு வழியாக பவானி ஆற்றை அடைந்தது. பின்னர் அனைத்து சிலைகளும் ஆற்றில் கரைக்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் கரையில் நின்று வேடிக்கை பார்த்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால் தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதேபோல் சத்தியமங்கலம் கடைவீதி, சின்ன மசூதி, மணிக்கூண்டு அருகே உள்ள பெரிய மசூதி முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கூடுதுறையில் கரைப்பு

ஈரோடு மற்றும் நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் கரைப்பதற்காக வாகனங்களில் கொண்டுவரப்பட்டன. 2 அடி முதல் 10 அடி வரையிலான ஏராளமான சிலைகள் கொண்டுவரப்பட்டன. முன்னதாக கூடுதுறை படிக்கட்டில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னர் ஆற்றில் கரைத்து வழிபட்டனர். விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதற்காக கூடுதுறையில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். இதையொட்டி பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Related Tags :
Next Story