'எனது காரை வழிமறித்தது பொதுமக்கள் அல்ல'- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. விளக்கம்


எனது காரை வழிமறித்தது பொதுமக்கள் அல்ல- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. விளக்கம்
x

நாங்குநேரியில் ‘எனது காரை வழிமறித்தது பொதுமக்கள் அல்ல’ என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 10-ந் தேதி இரவு நாங்குநேரியில் வைத்து பொதுமக்கள் சிலர் என்னுடைய காரை முற்றுகையிட்டதாகவும், அவர்களை என்னுடைய கார் டிரைவர் அடிக்க பாய்ந்ததாகவும் வெளியான தகவலும், வீடியோ காட்சிகளும் முற்றிலும் பொய்யானவை. அந்த சம்பவத்தில், என்னுடைய காரை வழிமறித்தவர்கள் பொதுமக்கள் கிடையாது.

நாங்குநேரியில் எனக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியினர் 4 பேர்தான் அங்கே இருந்தனர். ஒருவர் மட்டும் என் காருக்கு முன்பாக சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினார். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும். நாங்குநேரியில் என்னுடைய வளர்ச்சியையும், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியையும் சுயநலத்துக்காக கட்டுப்படுத்த நினைக்கும் அவர்கள், காழ்ப்புணர்ச்சியோடு உண்மையை மறைத்து, தவறான தகவலை பரப்பிவிட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம்.

மேலும் எனது கார் டிரைவர் காரை மறித்தவர்களை அடிக்க பாய்ந்தார் என்பதும் தவறானதாகும். காரின் முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பி அச்சுறுத்தியவரை எனது டிரைவர் கீழே இறங்கி ஒதுங்க சொன்னார். நாங்குநேரி மக்களிடம், நான் எப்படி பழகி வருகிறேன். அவர்களின் கோரிக்கைகள் மீது எப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கிறேன் என்பது பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். நாங்குநேரி தொகுதியில் என்னுடைய வளர்ச்சியை தடுக்க விஷமத்தனத்தோடு செயல்படுபவர்களை பார்த்து ஒரேயொரு கேள்வியை மட்டும் இந்த நேரத்தில் கேட்க ஆசைப்படுகிறேன். என்னுடைய வளர்ச்சியை தடுத்து நிறுத்த, நான் நாங்குநேரிக்கு எம்.எல்.ஏ.வாக வந்தது முதலே தொடர்ந்து விடாமல் முயற்சி செய்து கொண்டு வருகிறீர்கள். இதே அக்கறையை நாங்குநேரி தொகுதியும், காங்கிரஸ் கட்சியும் வளர்ச்சி பெற ஏன் காட்ட மறுக்கிறீர்கள்?

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story