தா.பழூர், உடையார்பாளையம் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது


தா.பழூர், உடையார்பாளையம் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது
x

தா.பழூர், உடையார்பாளையம் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

அரியலூர்

கொட்டித்தீர்த்தது

அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. முன்னதாக பகல் முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. லேசாக பெய்ய தொடங்கிய மழை சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. அப்போது சுழற்காற்றும் வீசியது. காற்றின் காரணமாக சாலையில் செல்பவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரம் காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது.

பள்ளி முடிந்து வந்த மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டே வீடு திரும்பினர். தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் கூட சாலையில் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அனைத்து பள்ளி வாகனங்களும் மழை காரணமாக தாமதமாகவே இயக்கப்பட்டன.

மின்சாரம் துண்டிப்பு

மேலும் மழை காரணமாக 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழை விட்ட பின்னர் அரை மணி நேரத்தில் மின் பாதைகள் சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. சம்பா சாகுபடிக்கு பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் விவசாயிகள் நெல் விதைக்கும் பணியில் ஈடுபடாமல் இருந்து வந்தனர். தற்போது பெய்துள்ள கனமழையை பயன்படுத்தி விவசாயிகள் நெல் விதைப்பு பணியினை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடையார்பாளையம்

உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் வெயிலின் தாக்கம் குறைந்து, வானில் கருமேகம் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் உடையார்பாளையம், கழுமங்கலம், முணியத்தரியான்பட்டி, கச்சிப்பெருமால், துலாரங்குறிச்சி, சூசையப்பர்பட்டிணம், இடையார், ஏந்தல், வானத்திரியான்பட்டிணம், ஒக்கநத்தம், பிலிச்சிக்குழி, காடுவெட்டாங்குறிச்சி, சோழங்குறிச்சி, பருக்கல், வெண்மான்கொண்டான், சுத்தமல்லி, உள்ளியக்குடி, நடுவலூர், கீழமைக்கேல்பெட்டி, மேலமைக்கேல்பட்டி ஆகிய ஊராட்சிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மின்சாரம் அவ்வப்போது தடைபட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story