திருவண்ணாமலை இடைத்தேர்தல்தான் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது
திருவண்ணாமலை இடைத்தேர்தல்தான் 1967-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது என்று திருவண்ணாமலையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலை இடைத்தேர்தல்தான் 1967-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது என்று திருவண்ணாமலையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மலைகள் சூழ்ந்த மாவட்டம்
திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இங்கு கூடியிருக்க கூடிய உங்கள் எழுச்சி, ஆர்வத்தை, உணர்ச்சியை, ஆரவாரத்தை காணும்போது மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக பெரும்திரளாக திரண்டு இருக்கும் மகளிரை எல்லாம் பார்க்கின்ற நேரத்தில் எனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டால் கொஞ்ச நேரம் பேசாமல் அப்படியே உங்கள் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை என்னிடத்தில் தொன்றுகிறது.
எவ்வளவு கட்டுப்பாடு, அதுவும் பெண்களிடத்தில் காணப்படும் கட்டுப்பாட்டை காணும் போது மெய் சிலிர்த்து இருக்கிறேன். 4 பெண்கள் இருந்தால் அங்கு என்ன கூச்சல், குழப்பம், சலசலப்பு, கலகலப்பு இருக்கும். ஆனால் ஆயிரகணக்கில் திரண்டு இருக்க கூடிய பெண்கள் இடையே கட்டுப்பாடுகள் இருப்பதை காணும் போது இதுதான் திராவிட உணர்வு என்று எண்ணி பார்க்கிறேன்.
பொன்னூர் மலை, பருவத மலை, கவுத்தி மலை, திருவண்ணாமலை இப்படிப்பட்ட மலைகள் சூழ்ந்த மாவட்டம் இந்த திருவண்ணாமலை மாவட்டம். வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே மனிதன் வாழ்ந்த தடயங்கள் கொண்ட மாவட்டம் இது.
இங்கு கற்கால மனிதர் வரைந்த பாறை ஓவியங்கள், அவர்கள் பயன்படுத்திய பல்வேறு கருவிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அதுமட்டுமல்ல செங்கம் நடுகற்கள், பல்லவர் கால குடவரைகள், சோழர் கற்றளி கற்சிலை கோவில்கள், விஜய நகர பெருங்கோவில்கள் என பண்பாட்டு அடையாளங்கள் பரவி கிடைக்க கூடிய மாவட்டம் இந்த திருவண்ணாமலை மாவட்டம்.
ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம்
, திருவண்ணாமலை நகரத்தில் பேரறிஞர் அண்ணா பெயரிலான நுழைவு வாயிலையும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலையையும் திறந்து வைத்தேன்.
தீபங்களால் நிறைந்த திருவண்ணாமலையே மின் விளக்குகளால் ஜொலித்து பேரறிஞர் அண்ணாவையும், தலைவர் கலைஞருக்கும் சிறப்புச் செய்ய இந்தத் திருவண்ணாமலை நகரம் எந்த வகையில் எல்லாம் பொருத்தமானது என்பதை அந்த விழாவில் நான் குறிப்பிட்டுப் பேசினேன்.
1963-ம் ஆண்டு நடந்த திருவண்ணாமலை இடைத்தேர்தல் தான் 1967-ம் ஆண்டு நடந்த ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது என்பதையும் நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.
கழக ஆட்சி அமைந்தாலே திருவண்ணாமலை மாவட்டமானது புத்தெழுச்சி பெறும். அதை இங்கே கூடியிருக்கிற மக்களாகிய உங்கள் முகங்களில் நான் பார்க்கிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்கியதே தலைவர் கலைஞர் தான் என்று நான் முன்பே சுட்டிக் காட்டினேன். மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைத்துக் கொடுத்தவரும் கலைஞர் தான்.
அரசுத்திட்டங்கள்
சாத்தனூர் அணையைப் புனரமைப்பு செய்ததும், திருவண்ணாமலையை தனிப்போக்குவரத்து மண்டலமாக ஆக்கியதும், ரூ.120 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி, செய்யாறு சிப்காட் தொழிற் பூங்கா, ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம், காரப்பட்டில் அரசு பட்டயக் கல்லூரி, திருவண்ணாமலை நகருக்கு புதிய பாதாள சாக்கடைத் திட்டம்,
திருவண்ணாமலை நகராட்சிக்கு 36 கோடி ரூபாயில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், புதிய விளையாட்டு அரங்கம், புதிய நீச்சல் குளம், கலசப்பாக்கம் மிருகண்டாநதி நீர்த்தேக்கம், செங்கம் குப்பநத்தம் அணை, போளூர் செண்பகத்தோப்பு அணை, தண்டராம்பட்டு தனி தாலுகா, தண்டராம்பட்டில் நுகர்பொருள் வாணிபக் கிடங்கு, புதுப்பாளையத்துக்கு சாத்தனூர் அணை கூட்டுக் குடிநீர்த் திட்டம், அம்மாபாளையத்தில் ரூ.60 கோடியில் பால்பவுடர் தொழிற்சாலை, வந்தவாசியில் அரசுக் கல்லூரிக்கு ரூ.8 கோடியில் புதிய கட்டடம், ஆரணியில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி இப்படி பல்வேறு திட்டங்களைச் செய்து கொடுத்த அரசு தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு.
கோவிலை பாதுகாத்தது தி.மு.க. அரசு
இதில் மிக முக்கியமானது 1975-ஆம் ஆண்டு அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணியை முழுமையாக செய்தது தி.மு.க. அரசு தான். இந்தத் திருப்பணிக்கு தனிக்குழுவை அமைத்து அதற்காக முதல்- அமைச்சர் கலைஞர் அக்கறை எடுத்துக் கொண்டார். அன்றைய நாளில் ஒரு பெரும் தொகையாக ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் அதற்காக நிதி ஒதுக்கினார்.
மேலும் ஆணையர் பொதுநல நிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தார். தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இருந்து நன்கொடைகள் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்தார்.
இதைவிட முக்கியமாக இன்னொன்று அருணாசலேஸ்வரர் கோவிலைப் பாதுகாத்ததும் தி.மு.க. அரசு தான். அருணாசலேஸ்வரர் கோவில் என்பது தமிழ்நாட்டின் சொத்து. அதைக் கட்டிக் காத்தது தி.மு.க. அரசு. நிலக்கடலை சாகுபடியில் மாநிலத்தில் முதலிடம் பெற்றிருக்கிறது இந்த திருவண்ணாமலை மாவட்டம்.
நெல் உற்பத்தியில் மூன்றாவது இடம் பெற்றிருக்கிறது. மலைக்குன்றுகளைப் பசுமையாக்கும் முன்மாதிரி முயற்சியாக பசுமைக் குன்றுகள் திட்டம் என்ற ஒரு அற்புதமானத் திட்டம் இந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 4 மலைக்குன்றுகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒருங்கிணைந்த பண்ணைப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் தேனீ பூங்கா, புறக்கடைக் கோழிவளர்ப்பு கொட்டகை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தோட்டக்கலை நாற்றங்கால் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
13 கோவில்களின் குடமுழுக்கு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான ஆன்மிகப் பணிகளும் நடந்து வருகிறது. அருணாசலேஸ்வரர் வலம் வரும் நான்கு மாடவீதி சாலைகள் கான்கிரீட் சாலைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டுமென்று நான் ஏற்கனவே சட்டபேரவையில் அறிவித்திருக்கிறேன். அதன் முதல் கட்டமாக தற்போது காந்தி சிலை முதல் திருவூடல் தெரு சந்திப்பு வரை ரூ.15 கோடி மதிப்பீட்டில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பணிகள் நட ந்து கொண்டிருக்கிறது.
அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் முதலுதவி மையத்தை காணொலி மூலமாக நான் ஏற்கனவே தொடங்கி வைத்தேன். ஓதுவார் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டு மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் கோவில் மின்வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் 37 கோவில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
கிராமப்புற பகுதியில் உள்ள 37 கோவில்களில் திருப்பணி செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. செய்யாறு பட்சீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான 4.28 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டிருக்கிறது.
திருவண்ணாமலை நகரம் வடவீதி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் ஓராண்டில் 13 கோவில்களின் குடமுழுக்கு விழா சிறப்பாக, விமரிசையாக நடந்திருக்கிறது. 131 கோவில்களில் ரூ.60 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டிலான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.