நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு சாதகமாக இருக்கும்
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு சாதகமாக இருக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
அ.தி.மு.க.வில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் உறுப்பினர் சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அதிக அளவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பவர்களுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி 40 லட்சம் உறுப்பினராக கொண்டு வந்தார். அதன் பிறகு பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதா ஒன்றரை கோடி உறுப்பினராக மாற்றிக் காட்டினார். தற்போது 3-வது பொதுச்செயலாளராக உருவெடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி அதனை 2 கோடி உறுப்பினர்கள் உள்ள கட்சியாக மாற்றுவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி தான் உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக 2 கோடி உறுப்பினர்கள் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவார்கள். தி.மு.க. ஆட்சி மீது உள்ள வெறுப்பு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு சாதகமாக இருக்கும். கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும். தேவையில்லாத விஷயங்களில் முட்டுக் கொடுப்பதை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்து வருகின்றனர். ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அ.தி.மு.க.வில் மீண்டும் இணையலாம். இவ்வாறு அவர் கூறினார்.