முத்தையாபுரத்தில் அமைக்கப்படும்தனியார் செல்போன் கோபுரத்தை அகற்ற கோரிக்கை
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் அமைக்கப்படும் தனியார் செல்போன் கோபுரத்தை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பெதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் அமைக்கப்படும் தனியார் செல்போன் கோபுரத்தை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பெதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினர். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், முள்ளக்காடு பஞ்சாயத்து பொட்டல்காடு கிராமத்தில் இருந்து தினமும் பள்ளி கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று படித்து வருகிறோம். எங்களுக்கு வசதியாக தூத்துக்குடி- பொட்டல்காடு இடையே 5 சி என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்த பஸ் கொரோனாவுக்கு பின்பு நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் நாங்கள் பொட்டல்காட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முள்ளக்காடு பகுதிக்கு நடந்து சென்று பஸ்சை பிடித்து பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகிறோம். இதனால் எங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். ஆகையால் கூடுதல் பஸ் வசதி செய்து தரவும், ஏற்கனவே நிறுத்தப்பட்ட 5சி பஸ்சை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
செல்போன் கோபுரத்தை...
முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட முனியசாமி கோவில் தெரு, வடக்கு தெரு பெரியார் தெரு, தோப்பு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செல்போன் கோபுரம் குடியிருப்புகளுக்கு மிகவும் நெருக்கமாக அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என மக்கள் அச்சப்படுகின்றனர். ஆகையால் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செல்போன் கோபுரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.