திசையன்விளை மனோ கல்லூரி அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்படும்-சபாநாயகர் அப்பாவு பேச்சு
திசையன்விளை மனோ கல்லூரி அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்படும் என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.
திசையன்விளை:
திசையன்விளை மனோ கல்லூரி அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்படும் என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.
அடிக்கல் நாட்டு விழா
திசையன்விளை மனோ கல்லூரி முன்பு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா ேநற்று நடந்தது.
சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தரம் உயர்த்த...
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிக்கூடங்களை திறந்ததால், கல்வி கற்றவர்களின் விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக உயர்ந்தது. எனவேதான் காமராஜரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். தமிழகத்தில் புதிய கல்விக்கூடங்களை கட்டுவதற்கு ரூ.1,000 கோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த கல்விக்கூடங்களுக்கு காமராஜர் பெயரை சூட்டி பெருமைப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
திசையன்விளை மனோ கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த கல்லூரிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்கு ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இக்கல்லூரியானது இந்த ஆண்டில் அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவிகள் மனு
திசையன்விளை பஸ் நிலையத்தில் இருந்து மனோ கல்லூரிக்கு அரசு டவுன் பஸ் சேவையை நீட்டித்து தர வேண்டும் என்று மாணவிகள் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திசையன்விளை, குருகாபுரம், நந்தன்குளம், எருமைகுளம், ரோச் மாநகர், ஆனைகுடி, பொத்தகாலன்விளை, இடையன்குடி, இலக்கரிவிளை, காரம்பாடு, அப்புவிளை உள்ளிட்ட 13 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.