தாளவாடி அருகே தொடர்ந்து அட்டகாசம் செய்யும்கருப்பன் யானையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?;விவசாயிகள் எதிர்பார்ப்பு
தாளவாடி அருகே தொடர்ந்து அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
தாளவாடி
தாளவாடி அருகே தொடர்ந்து அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.
கருப்பன் யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் உணவு, தண்ணீர் தேடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த ஆண்டு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து நாள்தோறும் பயிர்களை நாசம் செய்து வந்தது. இதனால் கருப்பன் யானையை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து கலீம், அரிசி ராஜா, கபில்தேவ் என 3 கும்கி யானைகள் மற்றும் மருத்துவ குழுவினர் கடந்த 13-ந் தேதி ஜோராக்காடு வனப்பகுதிக்கு வந்தார்கள்.
மயங்கவில்லை
அப்போது வனத்தை விட்டு வெளியே வந்த கருப்பன் யானைக்கு 2 முறை மருத்துவ குழுவினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனாலும் மயங்காத கருப்பன் யானை காட்டுக்குள் தப்பி சென்றது.
இதையடுத்து கருப்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர். இதனால் யானையை பிடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 25-ந் தேதி கும்கி யானைகள் பொள்ளாச்சி டாப் சிலிப் பகுதிக்கு லாரி மூலம் மீண்டும் கொண்டு செல்லப்பட்டன. இந்த தகவல் கிடைத்ததும் ஜோராக்காடு, கரளவாடி, திகனாரை கிராமமக்கள் கருப்பன் யானையை பிடிக்கும் வரை கும்கி யானைகளை கொண்டு செல்லக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
அப்போது வனச்சரகர்கள் ராமலிங்கம், சதீஸ் மற்றும் தாளவாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விவசாயிகளிடம், யானை பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி நடைபெறுகிறது. அதுவரை பாகன்கள் இல்லாமல் கும்கி யானைகளை இங்கு வைத்திருக்க முடியாது. மயக்க ஊசியும் இன்னும் வரவில்லை. வருகிற (அதாவது நேற்று முன்தினம்) 8 அல்லது 9-ந் தேதி கும்கி யானைகள் தாளவாடி பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டு கருப்பன் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். இதனால் அப்போது விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டார்கள்.
இந்தநிலையில் கருப்பன் யானை தினமும் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது ஆனால் வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தபடி இன்னும் கருப்பன் யானையை பிடிக்க கும்கி யானைகளை அழைத்து வரவில்லை. தொடர்ந்து பயிர்கள் நாசம் ஆவதை தடுக்க வேண்டும் என்றால் விரைந்து கருப்பன் யானையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். வனத்துறையினர் அதற்கு நடவடிக்கை எடுப்பார்களா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.