கூடுதல் பணம் தருவதாக ஐ.டி. பெண் ஊழியரிடம் ரூ.26 லட்சம் மோசடி
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் பணம் தருவதாகக்கூறி ஐ.டி. பெண் ஊழியரிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஐ.டி. நிறுவன ஊழியர்
குடியாத்தம் அருகே உள்ள கொட்டமிட்டா பகுதியை சேர்ந்த மகேந்திரன் மனைவி சந்தியா (வயது 37), என்ஜினீயர். இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது சந்தியா வீட்டில் இருந்து பணிபுரிகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியா ஆன்லைனில் பகுதிநேர வேலை ஏதாவது உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
அப்போது வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயரில் ஆன்லைன் வெப்சைட் இருந்தது. அதில், பகுதிநேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், உள்ள செல்போன் வாட்ஸ்-அப் எண்ணை வேலை தொடர்பான தகவல்களுக்காக சந்தியா தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதலாக பணம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.
ரூ.26 லட்சம் மோசடி
அதனை உண்மை என்று நம்பிய அவர் வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கப்பட்ட வங்கிக்கணக்கில் பணம் செலுத்த தொடங்கினார். ஒவ்வொரு முறையும் பணம் முதலீடு செய்யும்போது அவருடைய கணக்கில் கூடுதலாக பணம் இருப்பதாக காட்டியது. அதனால் சந்தியா ரூ.26 லட்சம் அந்த வங்கிக்கணக்கில் செலுத்தினார். அதன்பின்னர் அவற்றை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால் அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை. அதன்பின்னர் பல்வேறு முறை சந்தியா வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டும் மறுமுனையில் யாரும் பேசவில்லை. அப்போது தான் அவர் மர்மநபர்கள் ஆன்லைன் மூலம் ரூ.26 லட்சத்தை மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.