ஒரு வருடமாக அட்டகாசம் செய்யும் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம்


ஒரு வருடமாக அட்டகாசம் செய்யும் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
x

ஒரு வருடமாக அட்டகாசம் செய்யும் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனா்.

ஈரோடு

ஒரு வருடமாக அட்டகாசம் செய்யும் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காட்டு யானை

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைகிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காட்டு யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறியது. அந்த யானை வனப்பகுதியையொட்டி உள்ள பூதிக்காடு, செங்காடு உள்ளிட்ட கிராமங்களில் நுழைந்து அங்குள்ள விவசாய தோட்டங்களில் வளர்ந்திருக்கும் பயிர்களை நாசம் செய்ய தொடங்கியது.

வனத்துறையிடம் புகார்

தொடக்கத்தில் தண்ணீரை தேடி வெளியேறிய யானை, தோட்டத்து பயிர்களை தின்று ருசி பார்த்துவிட்டது. அதனால் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து அவ்வப்போது தோட்டங்களில் புகுந்து சோளம், வாழை, கரும்பு பயிர்களை துவம்சம் செய்து வருகிறது.

இதனால் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும், காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கடத்தூர் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

கண்காணிப்பு

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர். அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் பூதிக்காடு கிராமத்துக்கு வந்தனர். ஓசூரில் இருந்து யானையை கொண்டு செல்ல லாரியும் வரவழைக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முதல் கடம்பூர் வனச்சரகர் ரவிச்சந்திரன் தலைமையில் வனத்துறையினர் இணைந்து காட்டு யானை செல்லும் வழி தடங்களை கண்காணித்து வருகின்றனர்.

பாதுகாப்பு பணி

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைக்கு 30 முதல் 35 வயது வரை இருக்கலாம். சமமான இடத்தில் தோட்டத்துக்குள் நுழையும்போதுதான் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முடியும். அதற்காகத்தான் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்' என்றனர்.

வனத்துறையினருடன் கடம்பூர் போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story