திற்பரப்பில் 'குளு குளு' சீசன்


திற்பரப்பில் குளு குளு சீசன்
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மலையோர பகுதிகளில் மழை பெய்ததால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

மலையோர பகுதிகளில் மழை பெய்ததால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

திற்பரப்பு அருவி

மலையோர பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்ததால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் நேற்று திற்பரப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் குளு குளு சீசன் நிலவியது. இதனால் குடும்பம், குடும்பமாக திற்பரப்புக்கு படை எடுத்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். அவர்கள் அருவியல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் சிறுவர் நீச்சல் குளத்திலும் குளித்து விட்டு, அருவி எதிரில் உள்ள பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். அருவியின் மேல் பகுதியில் தடுப்பணையில் உல்லாச படகு சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாகனங்களில் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் உள்ள 12 சிவாலய ஓட்ட ஆலயங்களில் ஒன்றான திற்பரப்பு மகாதேவர் கோவிலில் காலையும், மாலையும் அதிக அளவில் வந்த சுற்றுலா பயணிகள் வழிபட்டனர்.

மாத்தூர் தொட்டிப்பாலம்

இதேபோல் மாத்தூர் தொட்டி பாலத்திலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. காலை முதலே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்ததால் தொட்டி பாலம் களை கட்டியது. 1,240 அடி நீளமும், 104 அடி உயரமும் கொண்ட இந்த பாலத்தில் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சுற்றுலா பயணிகள் நடந்து சென்று பிரமாண்டமான பாலத்தின் தூண்களை பார்த்து ரசித்து திரும்பினர். சிலர் பாலத்தின் கீழே ஓடும் பரளியாற்றில் குளித்து மகிழ்ந்தனர்.


Next Story