காலணி அறுந்ததால் ரூ.20 ஆயிரம் இழப்பீடு
காலணி அறுந்ததால் ரூ.20 ஆயிரம் இழப்பீடு
திருப்பூர்
திருப்பூர் மண்ணரை கருமாரம்பாளையத்தை சேர்ந்தவர் சுபா (வயது 23). இவர் கடந்த 30-12-2021 அன்று இரவு திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள ஷாப்பிங் சிங்கப்பூர் என்ற கடையில் ரூ.200, ரூ.240 மதிப்பில் 2 ஜோடி காலணி வாங்கினார். இதற்கு கடையில் ரசீது கேட்டும் அவர்கள் கொடுக்கவில்லையாம். இந்த நிலையில் ரூ.200-க்கு வாங்கிய காலணி, கடந்த 7-1-2022 அன்று அறுந்து விட்டது. உடனே சுபா அந்த காலணியை எடுத்துக்ெகாண்டு கடைக்கு சென்று கேட்டுள்ளார்.
அவர்கள் காலணியை சரிசெய்து கொடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால் சரி செய்த பிறகு அந்த காலணியை சுபா அணியமுடியாத அளவுக்கு சிறியதாகி விட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் சுபா திருப்பூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். எதிர்தரப்பு ஆஜராகவில்லை.
இதைத்தொடர்ந்து காலணிக்கான ரூ.200, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.20 ஆயிரம், வழக்கு செலவுத்தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை சுபாவுக்கு, கடையின் உரிமையாளர் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு தலைவர் தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.